2014-09-06 15:36:31

பொதுக்காலம் 23ம் ஞாயிறு ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மின்னஞ்சலில் அவ்வப்போது ஒரு சிறு கட்டுரை சுற்றி, சுற்றி வருகிறது. Coca Cola நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி Brian G.Dyson என்பவர் குடும்ப உறவுகள் பற்றி எழுதிய கட்டுரை இது.
பல பந்துகளை ஒரே நேரத்தில் தொடர்ச்சியாகத் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இந்த வித்தையை செய்வதற்கு, தனித் திறமை வேண்டும். இந்த வித்தையோடு வாழ்வை ஒப்பிட்டு Brian G.Dyson அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரையின் முதல் சில வரிகள் இதோ:
பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை... நீங்கள் செய்யும் தொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம். இந்த ஐந்து பந்துகளில் உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் அதாவது, குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவை கீழே விழுந்தால், சிதறிவிடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது இயலாத காரியம்.
வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள்... தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்து கொள்ளத் தவறுகிறோம், அல்லது, புரிந்து கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதை ஆழமாக அலசிப்பார்க்க இன்றைய ஞாயிறு நற்செய்தி நம்மை அழைக்கிறது.

நமது தொலைக்காட்சிகளில் வரும் பல மெகாத் தொடர்கள் குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் காட்டிவருகின்றன. பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா? அவை ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலி போல நீண்டு கொண்டே செல்வதாக... அல்லது, பிரச்சனைகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒரு மலைபோல குவிவதாக காட்டப்படுகின்றன. இந்தச் சங்கிலிகளால் கட்டுண்டு, அல்லது இந்த மலைகளுக்குக் கீழ் நசுக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்கள் படும் வேதனைகள் நம்மில் பலரை கண்ணீரில் மூழ்கச் செய்கின்றன.
எண்ணிக்கையின்றி பெருகிவரும் இத்தொடர்களின் வெற்றிக்குக் காரணம்... பெரும்பாலான இரசிகர்களின் ஈடுபாடு. ‘இத்தொடர்களில் காட்டப்படும் பிரச்சனைகள்தானே நம் குடும்பங்களிலும் நடக்கின்றன’ என்று சொல்லும் அளவுக்கு இத்தொடர்கள் இரசிகர்கள் மனதில் அரியணை கொண்டுள்ளன. அவ்வப்போது நிஜமானக் குடும்பத்தில் மனத்தாங்கல்கள், வாக்குவாதங்கள் நிகழும்போது, இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகளும், வசனங்களும் இந்தக் குடும்பங்களை மறைமுகமாகப் பாதிக்கின்றனவோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.
அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பதுபோல், குடும்பப் பிரச்சனைகளை மீண்டும், மீண்டும் காட்டும் நமது மெகாத் தொடர்கள், இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்வது அபூர்வம். அப்படியே சொல்லப்படும் தீர்வுகளும் பயனுள்ளவையா அல்லது வெறும் பரபரப்பை உருவாக்குகின்றனவா என்பதும் கேள்விதான்.

தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றிய ஆய்வு அல்ல இது. இன்றைய நற்செய்தி நம்மை குடும்பத்தின் பிரச்சனைகளுக்கு அழைத்து வந்திருப்பதால், இத்தொடர்களைப் பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளோம். தொலைக்காட்சித் தொடர்கள் கூறும் கருத்துக்களை உள்வாங்கும் அளவுக்கு நாம் நற்செய்தி சொல்லும் கருத்துக்களை உள்வாங்குகிறோமா என்பதை அலசிப் பார்க்க இந்த ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது.
குடும்பத்தில் ஒருவர் தவறு செய்யும்போது என்ன செய்ய முடியும், என்ன செய்யவேண்டும் என்ற தீர்வுகளை இன்று இயேசு நற்செய்தியில் கூறியுள்ளார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது நம் மனங்களில் நம்பிக்கை பிறக்கின்றதா? அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள் நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராது என்று நமது மனம் சொல்கிறதா? உண்மையாகவே நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் பார்ப்போமே. இயேசு தம் சீடர்களிடம் அன்று சொன்னது... இதோ, நம்மிடம் இன்று சொல்வது இதுதான்:
மத்தேயு நற்செய்தி 18: 15-17
உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது, அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப, உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம் கூறுங்கள்.

இப்போது நாம் கேட்ட இந்தப் பகுதியை மட்டும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நாம் பின்பற்றினால், உறவில் உருவாகும் பிரச்சனைகள் பெரிதும் விலகிவிடும். Interpersonal relationship அதாவது, நமக்கும், அடுத்தவருக்கும், குறிப்பாக, நமக்கும், நமக்கு நெருங்கியவர்களுக்கும் இடையே இருக்கவேண்டிய உறவைக் குறித்து எத்தனையோ மனநலவியல் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பல பக்கங்களில் விளக்கப்படும் உண்மைகளை இயேசு ஒரு சில வரிகளில் விளக்கியுள்ளது போல் எனக்குத் தோன்றுகிறது. வாழ்க்கைக்கு மிகவும் தேவையான இந்த முக்கியமான பாடங்களை மீண்டும் பயில, இயேசுவின் பாதங்களில் நாம் அமர்வோம்.

இன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சவாலாக ஒலிக்கிறது. உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்பவை இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். “உங்கள் சகோதரன் அல்லது சகோதரிக்கு எதிராக நீஙகள் பாவம் செய்திருந்தால்…” என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அவர் தொடர்ந்து கூறுவது பொருளுள்ளதாக இருக்கும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப் போடுகிறார்.

பொதுவாக நம் குடும்பங்களில் தவறு செய்பவர் யாரோ, அவரிடமிருந்து தவறைச் சரி செய்வதற்கான முயற்சிகளையும் எதிர்பார்ப்போம். உதாரணமாக, நான் என் உடன் பிறந்த ஒருவரிடம் கோபமாகப் பேசியிருந்தால், அவரைத் தேடிச்சென்று மன்னிப்பு கேட்பது என் கடமை. இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில், இயேசு நமக்கு முன் வைக்கும் சவால் கடினமான ஒன்று. நம் உடன் பிறந்தவர் குற்றம் செய்யும்போது, அதுவும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும்போது, அவர் நம்மைத் தேடி வந்து சமரச முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டும் என்று காத்திருக்காமல், நாம் அவரைத் தேடிச் செல்லவேண்டும் என்று இயேசு கூறுகிறார். நம் உடன் பிறந்தோர் புரிந்த குற்றத்தைக் களைய நாம் முதல் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று கூறுகிறார். நடக்கிற காரியமா இது? நடக்கிற காரியம் தான்... நடக்க வேண்டிய காரியமும் கூட.

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வார்த்தைகளைக் கேட்டதும், என் மனதில் இயேசுவின் மற்றொரு கூற்று பளிச்சிட்டது. மலைப்பொழிவில் அவர் கூறிய வார்த்தைகள் அவை:
மத்தேயு 5: 23-24
நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

காணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு, தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல். சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உங்கள் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக அவர் தரும் சவால் இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... உறவுகளில் தவறுகள் ஏற்படும்போது, யார் காரணம் என்ற வரலாற்றுக் குறிப்புக்களையும், கணக்குகளையும் பார்க்காமல், பிரச்சனையைத் தீர்க்கும் முதல் முயற்சிகள் நம்மிடமிருந்து வரவேண்டும் என்று இயேசு மலைப்பொழிவிலும், இன்றைய நற்செய்தியிலும் தெளிவாக்குகிறார்.

பிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன?
நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
மிக, மிக அவசியமான, ஆனால், கடினமான ஒரு வழி. வயதால் அல்ல, மனதால் முதிர்ச்சி அடைந்தவர்கள் பின்பற்றும் சரியான வழி இது. ஆனால், நம்மில் பலர் உறவுகள் விடயத்தில் மட்டும் வளர மறுத்து, முதிர்ச்சி அடைய மறுத்து அடம் பிடிக்கும் குழந்தைப் பருவத்திலேயே நின்றுவிடுகிறோம். தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, மனம்விட்டுப் பேசுவதற்குப் பதில், தேவையற்ற, சிக்கலான வழிகளைக் கடைபிடிக்கிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம்.
நம் மெகாத் தொடர்கள் கூறும் வழி இது. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும்... நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா, என்ன? தொலைக்காட்சித் தொடர்களில் பிரச்சனை பெரிதாக வேண்டும், குற்றவாளி ஒழிய வேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடகம் விறுவிறுப்பாக இருக்கும். நடைமுறை வாழ்வில் நம் குடும்பங்களில் விறுவிறுப்பு வேண்டுமா, அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.

2013ம் ஆண்டு நாம் கொண்டாடிய நம்பிக்கையின் ஆண்டின் ஓர் உச்சக்கட்ட நிகழ்வாக, அக்டோபர் 26ம் தேதி, பல்லாயிரம் குடும்பங்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்திற்கு திருப்பயணமாக வந்திருந்தனர். அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பசிலிக்கா வளாகத்தில் மாலை நேரம் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, மனநல அளவில் மாற்றுத்திறன் கொண்ட ஒரு சிறுவன் திருத்தந்தையைச் சுற்றிச் சற்றி வந்ததையும், அவரது இருக்கையில் ஏறி அமர்ந்ததையும் நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்புண்டு.
அந்தக் கூட்டத்தில் திருத்தந்தை அவர்கள், நலமான குடும்ப வாழ்வு அமைய நமக்குத் தேவையானது மூன்றே வார்த்தைகள் என்று கூறினார். இத்தாலிய மொழியில் Permesso, Grazie, Scusa என்ற இம்மூன்று வார்த்தைகளைக் கூறியத் திருத்தந்தை, கூடியிருந்த குடும்பத்தினர் அனைவரையும் அந்த வார்த்தைகளைத் திரும்பச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
குடும்பங்களில் எதையும் செய்வதற்கும், சொல்வதற்கும் மற்றவர்கள் அனுமதியைப் பெறும் வார்த்தை, Permesso. தமிழில் இதற்கு இணையாக நாம் சொல்லக்கூடியது... தயவுசெய்து. மற்றவர்களுக்கு நன்றி கூறும் வார்த்தை - Grazie. தவறு செய்யும்போது, மன்னிப்பு கேட்கும் வார்த்தை - Scusa.
தயவுசெய்து, நன்றி, மன்னிக்கவும்... மிக எளிதாகத் தோன்றும் இந்த மூன்று வார்த்தைகளையும், ஒப்புக்காக, செயற்கையாகச் சொல்லாமல், அவ்வார்த்தைகளுக்குத் தேவையான உண்மையான மனநிலையோடு சொன்னால், நம் குடும்பங்கள் நலமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
குடும்பங்களில் நல்லச் சூழல் உருவாக, எத்தனையோ மனநல அறிவாளிகள் சொல்லும் அறிவுரைகளைப் பின்பற்ற விழையும் நாம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லித்தரும் எளிதான வழிகளையும் பின்பற்ற முயல்வோமே! இந்த முயற்சிகளால் நாம் இழக்கப் போவது எதுவுமில்லை, ஒருவேளை அடையக்கூடிய பலன்கள் அதிகம் இருக்கலாம்!

இறைமகன் இயேசுவும், திருத்தந்தையும் கூறும் எளிய அறிவுரைகளின்படி வாழ முயலும் குடும்பங்களில் இறைவனின் பிரசன்னம் நிறைந்து பொங்க வழியுண்டு. இந்த உறுதியைத் தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதி வார்த்தைகளாக சொல்லியிருக்கிறார்:
மத்தேயு 18: 20
இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.








All the contents on this site are copyrighted ©.