2014-09-06 16:00:36

எழுத்தறிவு மக்களின் வாழ்வை மாற்றி அவர்களைப் பாதுகாக்கிறது, யுனெஸ்கோ இயக்குனர்


செப்.06,2014. எழுத்தறிவு மக்களின் வாழ்வை மாற்றுவதோடு அது அவர்களைப் பாதுகாக்கிறது என்ற ஓர் எளிய உண்மையை நினைப்பதற்கு உலக எழுத்தறிவு தினம் வாய்ப்பாக உள்ளது என்று, யுனெஸ்கோ இயக்குனர் Irina Bokova அவர்கள் கூறியுள்ளார்.
செப்டம்பர் 08, வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படும் உலக எழுத்தறிவு தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள Bokova அவர்கள், வறுமையைக் குறைத்து வேலைவாய்ப்பைப் பெறவும், அதிகமான ஊதியம் பெறவும், சுயமதிப்பில் வளரவும் மக்கள் ஒவ்வொருவருக்கும் எழுத்தறிவு உதவுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று உலகில் வயதுவந்தவர்களில் எண்பது கோடிப் பேர் எழுத்தறிவற்றவர்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள். 25 கோடிக்கு மேற்பட்ட சிறாருக்கு ஒருவரிகூட வாசிக்கத் தெரியாது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குறைந்தது நான்காண்டுகள் பள்ளிக்குச் சென்றிருந்தாலும் இந்நிலையைக் காண முடிகின்றது என்றும் யுனெஸ்கோ இயக்குனரின் செய்தி கூறுகிறது.
இவ்வாண்டு உலக எழுத்தறிவு தினம், “எழுத்தறிவும் உறுதியான வளர்ச்சியும்” என்ற தலைப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ, உலக எழுத்தறிவு தினத்தை 1965ம் ஆண்டில் அறிவித்தது. அத்தினம் 1966ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதிதான் முதன்முதலில் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.