2014-09-05 16:09:55

திருத்தந்தை : ஒதுக்கப்படும் ஒரு கலாச்சாரத்துக்குள் சிறார் பாதிக்கப்டுவதை நாம் அனுமதிக்கக் கூடாது


செப்.05,2014. இவ்வியாழன் மாலையில் "Scholas Occurentes" நிறுவன இயக்குனர்களை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கிடையே புரிந்துகொள்ளுதலையும், உடன்பிறந்தோர் உணர்வையும் வளர்ப்பதற்கு இந்நிறுவனத்தினர் எடுத்துவரும் முயற்சிகளை ஊக்கப்படுத்தினார்.
வன்முறையும் பணமும் மேலோங்கி நிற்கும் தூக்கியெறியும் ஒரு கலாச்சார அமைப்புக்குள் சிறாரும் முதியோரும் பலிகடா ஆவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
ஆரம்பப் பள்ளிப் பருவத்தில் வகுப்பில் தான் செய்த தவறுக்கு ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்குமாறு தனது தாய் கூறியதை இச்சந்திப்பில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று பல பள்ளிகளில், பெற்றோர், ஆசிரியரைக் கண்டிப்பதையும் காண முடிகின்றது என்றும் குறிப்பிட்டார்.
அர்ஜென்டீனா நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் "Scholas Occurentes" பன்னாட்டு நிறுவனம், உலகின் கல்வி நிறுவனங்களில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட உறப்பினர்களை ஒன்றிணைத்து புரிந்துகொள்ளுதலையும், உடன்பிறந்தோர் உணர்வையும் வளர்ப்பதற்கு முயற்சித்து வருகிறது.
இவ்வாரத்தில் உரோம் நகரின் ஒலிம்பிக் அரங்கத்தில் நடந்த அமைதிக்கான விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்த நிறுவனங்களில், Scholas நிறுவனம் முக்கிய அங்கம் வகித்தது. இந்த "Scholas Occurentes" நிறுவனம் உருவானதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.