2014-09-05 16:09:33

திருத்தந்தை, பானமா அரசுத்தலைவர் சந்திப்பு


செப்.05,2014. பானமா நாட்டு அரசுத்தலைவர் Juan Carlos Varela Rodríguez அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகள் துறையின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் பானமா அரசுத்தலைவர் Varela Rodríguez.
பானமா நாட்டுக்கும் திருஅவைக்கும் இடையேயுள்ள ஒத்துழைப்பு, அந்நாடு சந்திக்கும் சில சமூகப் பிரச்சனைகள், குறிப்பாக, இளையோர், ஏழைகள், நலிந்தோர் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டதாக, திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
மேலும், பானமா நாடு அமைதியைக் கட்டியெழுப்புவது குறித்தும், நடக்கவிருக்கும் 7வது அமெரிக்க மாநாடு குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டதாக, அப்பத்திரிகை அலுவலகம் மேலும் அறிவித்தது.
மத்திய அமெரிக்க நாடான பானமா, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் 2வது இடத்தில் உள்ளது. 2013ம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, மனித முன்னேற்ற குறியீட்டில் இலத்தீன் அமெரிக்காவில் 5வது இடத்தையும், உலகில் 59வது இடத்தையும் கொண்டுள்ளது. பானமா நாட்டுக் காடுகளில் வெப்பமண்டலத் தாவரங்களும் விலங்குகளும் பறவைகளும் பெருமளவில் உள்ளன. இங்குள்ள சில உயிரினங்கள் உலகில் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படாதவையாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.