2014-09-04 16:28:19

மனிதர்களுக்குத் தகுந்த மதிப்பு வழங்காமல் இருப்பதே பொருளாதார நெருக்கடி நிலைக்கு அடிப்படைக் காரணம் - கர்தினால் பரோலின்


செப்.04,2014. இத்தாலி நாட்டின் தொழில்துறையில் கிறிஸ்தவ விழுமியங்களைப் பதிக்க உழைத்துவரும் கத்தோலிக்கத் திருஅவை பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை தன் ஆதரவைத் தெரிவிக்கிறார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்கள் கூறினார்.
தொழிலாளர்களின் முழுமையான நலனுக்கென உழைத்துவரும் அருள் பணியாளர்கள் அடங்கிய ஒரு அமைப்பின் 38வது தேசியக் கருத்தரங்கு, உரோம் நகரில், செப்டம்பர் 3, இப்புதன் மாலையில் துவங்கிய வேளையில், அவர்களை திருத்தந்தையின் சார்பில் வாழ்த்திப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.
நாம் இன்று அனுபவித்துவரும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு, அடிப்படைக் காரணமாக அமைவது, மனிதர்களுக்குத் தகுந்த மதிப்பு வழங்காமல் இருப்பதே என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம் என்ற உண்மையை மீண்டும் நிலைநாட்டுவதே இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் என்று கூறினார்.
கடவுள், மனிதர்கள், இயற்கை, மனித உழைப்பு ஆகிய உண்மைகளை தகுந்த கண்ணோட்டத்துடன் காண்பதற்கு, திருஅவையின் சுற்றுமடல்கள் உதவியாக உள்ளன என்பதையும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
"உடன்பிறந்த உணர்வு: மனித முகம் கொண்ட பொருளாதாரமே தகுந்த வழி" என்ற மையக்கருத்துடன் இப்புதனன்று துவங்கிய கருத்தரங்கு, இவ்வெள்ளியன்று நிறைவுக்கு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.