2014-09-04 15:14:10

புனிதரும் மனிதரே : ஏழைகளிலும் ஏழைகளுக்குச் சேவை செய்தவர்(அருளாளர் அன்னை தெரேசா)


ஏழைகளிலும் ஏழைகளுக்குச் சேவை செய்தவர் அருளாளர் அன்னை தெரேசா. ஆப்ரிக்காவில் ஏழை நாடுகளில் ஒன்றாக நோக்கப்படும் எத்தியோப்பியாவில் இவர் இல்லம் தொடங்க விரும்பி அந்நாட்டு அரசரிடம் ஒருமுறை அனுமதி கேட்டார். எந்த சமய-சமூக அமைப்புகளுக்கும் அனுமதியளிக்காத அரசர், வேண்டா வெறுப்போடு, போனால் போகட்டும் என்ற எண்ணத்தில் அரண்மனை மேற்பார்வையாளரை அன்னை தெரேசாவிடம் அனுப்பினார். அந்த மேற்பார்வையாளரும் அன்னையிடம் சில கேள்விகள் கேட்டார். அரசிடமிருந்து உங்களுக்கு என்ன உதவி வேண்டும், என்று கேட்டதற்கு, ஒன்றும் வேண்டாம், துன்புறும் ஏழைகள் மத்தியில் எங்கள் சகோதரிகள் பணி செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பதில் சொன்னார் அன்னை தெரேசா. சகோதரிகள் என்ன வேலை செய்வார்கள் என்ற அடுத்த கேள்வியைக் கேட்டார் அரண்மனை மேற்பார்வையாளர். ஏழைகளிலும் ஏழைகளுக்கு எங்கள் சகோதரிகள் முழுமனதோடு இலவசமாக சேவை செய்வார்கள் என்று பதில் சொன்னார் அன்னை. மூன்றாவதாக ஒரு கேள்வியைக் கேட்டார் மேற்பார்வையாளர். சரி. உங்கள் சகோதரிகளுடைய தகுதி என்ன என்ற கேட்டதற்கு, அன்னை தெரேசா அவர்கள், ஒடுக்கப்பட்டோருக்கும், அன்பு செய்யப்படாதோருக்கும் அன்பையும் இரக்கத்தையும் கொடுக்கும் தகுதியைக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். சரி, உங்களுடைய அணுகுமுறை வித்தியாசமாகத் தெரிகிறது, நீங்கள் மதப் பிரச்சாரம் செய்து மக்களை மதம் மாற்றுவீர்களா என்று மீண்டும் கேட்டார் அரண்மனை மேற்பார்வையாளர். அதற்கும் சோர்வடையாமல் பதில் சொன்னார் அன்னை. துன்புறும் ஏழைகளுக்கு நாங்கள் செய்யும் சேவை, கடவுள் இவர்களிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் என்று கூறினார் அன்னை. இப்படி ஏழைகளிலும் ஏழைகளுக்குச் சேவை செய்த அருளாளர் அன்னை தெரேசாவின் நினைவு நாள் செப்டம்பர் 05. ஆக்னஸ் என்ற திருமுழுக்குப் பெயரைக் கொண்ட அருளாளர் அன்னை தெரேசா, 1997ம் ஆண்டு செப்டம்பர் 05ம் தேதி தனது 87வது வயதில் கல்கத்தாவில் இறையடி சேர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.