2014-09-04 16:26:42

திருத்தந்தையின் மறையுரை : நாம் பாவிகள் என்பதை மறந்துவிடும் திருஅவை, கிறிஸ்துவைச் சந்திக்கவும் மறந்து, மக்கிப் போகும்


செப்.04,2014. நம்மை மீட்கவரும் இயேசுவை, நமது பாவங்களுடன் சந்திக்கச் செல்வதே, கிறிஸ்தவ வாழ்வின் வலிமை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களிலும், அவற்றை மீட்க அறையப்பட்ட கிறிஸ்துவிலும் பெருமை பாராட்டமுடியும் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
இறைவார்த்தை என்பது, இவ்வுலக வார்த்தைகளைப் போல அறிவு செறிந்த, ஆற்றல் மிக்க வார்த்தைகள் அல்ல; அவை உண்மையில் இவ்வுலகக் கண்ணோட்டத்தில் மடைமையாகத் தெரியும் என்று புனித பவுல் அடியார் கூறியதை, திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்துவைச் சந்தித்த புனித பவுல் அடியார் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றி மட்டுமே தன்னால் பெருமைகொள்ள முடியும் என்று சொன்னதையும் திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.
தன் படகில், முதல்முறை இயேசுவைச் சந்தித்த புனித பேதுருவும், "ஆண்டவரே, நான் பாவி; என்னைவிட்டுப் போய்விடும்" என்று கூறுவது நமக்குப் பாடமாக அமைகிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
நமது பாவங்களையும், அவற்றிற்காக அறையப்பட்டக் கிறிஸ்துவையும் உணரும்போதுதான் கிறிஸ்தவ வாழ்வின் முழு வலிமையும் வெளிப்படும் என்பதை, திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
நாம் பாவிகள் என்பதை மறந்துவிடும் திருஅவை, கிறிஸ்துவைச் சந்திக்கவும் மறந்து, தன்னிலேயே நிறைவுகண்டு, மக்கிப் போகும் நிறுவனமாகிவிடும் என்ற எச்சரிக்கையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
மேலும், "நம்பகத் தன்மையுடன், நிபந்தனைகள் ஏதுமின்றி விளங்கும் கிறிஸ்தவ சாட்சியமே உண்மையானது" என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று தன் Twitter செய்தியாக வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.