2014-09-04 16:29:56

அமெரிக்காவின் தலைநகராகிய வாஷிங்க்டனில் முதுபெரும் தந்தையர் கூடிவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கூட்டம்


செப்.04,2014. கத்தோலிக்க, மற்றும் கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சபைகளின் முதுபெரும் தந்தையர் கூடிவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கூட்டம், செப்டம்பர் 9 முதல், 11ம் தேதி முடிய அமெரிக்காவின் தலைநகராகிய வாஷிங்க்டனில் நடைபெறவுள்ளது.
சிரிய கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தந்தை மூன்றாம் Ignatius Youssef Younan, அந்தியோக்கு மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros Raï, மெல்கித்திய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, மூன்றாம் Gregorius Laham ஆகியோர் பங்கேற்கும் இக்கூட்டத்தில், கீழைவழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்களும் பங்கேற்கிறார்.
முதுபெரும் தந்தையர் இவ்வாறு கூடிவருவது, அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக நடைபெறுவதாக கத்தோலிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.
கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்டுள்ள In Defense of Christians (IDC) என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உச்சிநிலை கூட்டம், கர்தினால் சாந்த்ரி அவர்கள் நடத்தும் ஒரு கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டுடன் துவங்குகிறது.
மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் சந்தித்துவரும் வன்முறைகள், பிரச்சனைகள் ஆகியவை இந்தக் கூட்டத்தின் மையக் கருத்தாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக, இப்பகுதியில் கிறிஸ்தவர்கள் அனுபவித்துவந்த வன்முறைகள், தற்போது இஸ்லாமிய அரசை நிறுவும் ஆர்வத்தில் செயல்படும் அடிப்படைவாதக் குழுக்களால் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நேரத்திலும் நாம் அமைதி காக்காமல், உடனடி செயல்பாடுகளில் இறங்கவேண்டும் என்று இக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள IDC அமைப்பின் தலைவர் Toufic Baaklini அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.