2014-09-03 15:03:57

புனிதரும் மனிதரே : நகரத்தினரை மனம் மாறத் தூண்டிய சிறுமி(St.Rose of Viterbo)


அக்காலத்தில் இத்தாலியின் வித்தெர்போ நகர், திருத்தந்தையின் ஆட்சிக்குட்பட்ட நகரங்களில் ஒன்றாக இருந்தது. இதனால் அந்நகர அதிகாரிகள் திருத்தந்தைக்கு எதிராகப் புரட்சி செய்தார்கள். அச்சமயத்தில் அந்நகரில் வாழ்ந்த சிறுமி ரோசுக்குப் பத்து வயதுகூட ஆகவில்லை. ஆயினும் அச்சிறுமி துணிச்சலுடன் வித்தெர்போ நகரத் தெருக்களிலும், மக்கள் கூடும் வளாகங்களிலும் சிலுவையைப் பிடித்துக்கொண்டு சென்று இயேசு, மக்களுக்காக அனுபவித்த சித்ரவதைகளை எடுத்துச் சொல்லி தபம் செய்யத் தூண்டினார். இச்சிறுமியின் மறையுரைகளைக் கேட்பதற்கு மக்கள் பெருமளவில் கூடினர். அவர் நின்று மறையுரையாற்றிய கல் தரையிலிருந்து மேலே எழும்பியதை மக்கள் பார்த்துள்ளனர். நகரின் பெரும்பாலான மக்கள் தபம் செய்வதற்கு முன்வந்தனர். திருத்தந்தையோடு தங்களுக்கு இருக்கும் நியாயமான பிணைப்பையும் உறுதிப்படுத்தினர். இதனால் நகர அதிகாரிகள் சிறுமி ரோசையும், அவரது பெற்றோரையும் ஊரைவிட்டே வெளியேற்றினர். சிறுமியின் பணி பல இடங்களுக்குப் பரவ இது உதவியது. முதலில் சொரியானோவிலும்(Soriano), பின்னர் வித்தோர்கியானோவிலும்(Vitorchiano) பரவியது. அந்த ஊர்களிலும் இச்சிறுமியின் மறையுரையைக் கேட்டு மக்கள் மனந்திரும்பினர். வித்தோர்கியானோவில் ஒரு சூனியக்காரி இருந்தார். இப்பெண் அவ்வூர் மக்களை அச்சுறுத்தி பிழைப்பு நடத்தி வந்தாள். சிறுமி ரோஸ், சூனியக்காரியை மனமாற்ற எடுத்த முதல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. பின்னர் ஒருநாள் பொதுவான வளாகத்தில் மரக்கட்டைகளை அடுக்கி அதற்கு நெருப்புவைத்து அந்த நெருப்பின் நடுவில் மூன்று மணிநேரம் இறைபுகழ் பாடிக்கொண்டு நின்றார் சிறுமி ரோஸ். எரியும் நெருப்பு சிறுமியை எதுவும் செய்யாததைக் கண்ட சூனியக்காரி, சிறுமியின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டி மனந்திரும்பினாள். சிறு வயது முதற்கொண்டு செப தபத்தில் வாழ்வைச் செலவழித்த வித்தெர்போ நகர் ரோஸ் தனது 17வது வயதில் 1251ம் ஆண்டில் இறந்தார். இவரது அழியாத உடல் 1258ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி புனித தமியான் ஆதீனத்துக்கு எடுத்துவரப்பட்டு வைக்கப்பட்டது. இப்புனிதையின் விழா செப்டம்பர் 4.
சிறுமி ரோசுக்கு அப்போது வயது மூன்று. ஒரு நாள் அவரின் தாய்வழி அத்தைகளில் ஒருவர் இறந்துவிட்டார். எல்லாரும் சவப்பெட்டியின் அருகில் நின்று அழுது கொண்டிருக்க, ரோஸ் மட்டும் உருக்கமாகச் செபித்தார். பின்னர் தனது பிஞ்சுக் கரங்களை அத்தையின் உடல்மீது வைத்து பெயர் சொல்லி அழைத்தார். இறந்த அவரது அத்தையின் கண்கள் மெல்லத் திறந்து, தனது மருமகளை அணைத்துக் கொண்டன. சிறுமி ரோசுக்கு ஏழு வயது நடந்தபோதே தனது வீட்டில் ஒரு சிறிய அறையில் தனிமையில் செபமும் தபமும் செய்து வந்தார். அவர் தனது பத்தாவது வயதை அடையும் முன்னரே அன்னைமரியா அவருக்குத் தோன்றி, அவரை புனித பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேருமாறுப் பணித்தார். இக்காட்சி முடிந்ததும் இயேசு சிலுவையில் முள்முடியுடன் தோன்றினார். அவரின் காயங்களிலிருந்து இரத்தம் கொட்டியது. இயேசுவே இத்துன்பம் ஏன் என ரோஸ் கேட்டபோது, இயேசு சொன்னார் : மனிதர்மீது நான் வைத்துள்ள அன்பும், மனிதர் செய்யும் பாவங்களுமே இதற்குக் காரணம் என்று. இதன்பின்னர் உலகின் பாவங்களுக்காகத் தன்னையே அடித்துக்கொண்டாள் சிறுமி ரோஸ். மக்கள் மனம் மாறுமாறும் போதித்து வந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.