2014-09-03 16:07:49

அடிப்படைவாதக் குழுக்களின் வன்முறைகள், மத்தியக் கிழக்குப் பகுதியை, கற்காலத்திற்கு இட்டுச்செல்கின்றன


செப்.03,2014. இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்தும் ஆர்வத்துடன் அடிப்படைவாதக் குழுக்கள், மத்தியக் கிழக்குப் பகுதிகளில் மேற்கொண்டுவரும் வன்முறைகள், கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத கற்காலத்திற்கு நம்மை இட்டுச்செல்கின்றன என்று அந்தியோக்கு முதுபெரும் தந்தை, கர்தினால் Bechara Boutros al-Rahi அவர்கள் கூறினார்.
கட்டுக்கடங்காமல் வளர்ந்துவரும் இந்த வன்முறைகளைக் கண்டும், உலக நாடுகள் காத்துவரும் மௌனம், ஒரு பெரும் இடறலாகவும், உலகைப் பீடித்துள்ள நோயாகவும் மாறியுள்ளது என்று கர்தினால் al-Rahi அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்று அழைப்பதற்கு மறுப்புத் தெரிவித்த கர்தினால் al-Rahi அவர்கள், 1400 முதல், 2000 ஆண்டுகளாக அப்பகுதிகளில் வாழ்ந்துவரும் ஓர் இனத்தவரை சிறுபான்மையினர் என்று அழைப்பது தவறு என்று கூறினார்.
சிரியா, எகிப்து, ஜோர்டான், பாலஸ்தீனா, ஈராக் ஆகிய பல்வேறு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் அண்மையக் காலமாக அனுபவித்து வரும் துன்பங்களை எடுத்துரைத்த கர்தினால் al-Rahi அவர்கள், அப்பகுதியில் கிறிஸ்தவர்கள் தாங்கிவரும் சிலுவையை, தாங்கள் விட்டுவிடப் போவதில்லை என்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit








All the contents on this site are copyrighted ©.