2014-09-02 15:40:29

யாழ் ஆயர் : இலங்கை அரசும், மாநில அவையும் இணைந்து செயல்பட முன்வரவேண்டும்


செப்.02,2014. தமிழர்களின் எதிர்கால நலனையும் ஏக்கங்களையும் கருத்தில் கொண்டு அரசும் மாநில அவையினரும் ஒருவர் ஒருவர் மீது பிழைகளைக் காண்பதைத் தவிர்த்து, இணைந்து செயற்பட வேண்டிய அவசர தேவை உள்ளது என்றார் யாழ் ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அவர்கள்.
இதற்கு இரு தரப்பினரும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த வாரம் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷ அவர்களையும் வடமாநில முதலமைச்சர் திரு. P. விக்னேஸ்வரன் அவர்களையும் தனித்தனியாக சந்தித்து உரையாடிய பின்னர், ஆயர் சவுந்தரநாயகம் அவர்கள், கத்தோலிக்க வார இதழான 'பாதுகாவலன்' பத்திரிகைக்கு வழங்கிய நேர்முகத்தில் இவ்வாறு கூறினார்.
கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இலங்கை ஆயர் பேரவையின் கூட்டத்தொடரின் இறுதியில், இலங்கை ஆயர்கள் இணைந்து அரசுத்தலைவர் ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தபோது, தற்போதைய நாட்டின் நெருக்கடிகள் குறித்து ஆயர்கள் அவருடன் கலந்துரையாடியதாகவும், குறிப்பாக பொதுபல சேனாவுடைய அத்துமீறிய செயற்பாடுகள், இராணுவத்தின் நில அபகரிப்புப் போன்ற விடயங்களை அரசுத்தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் ஆயர் சவுந்தரநாயகம் அவர்கள் கூறினார்.
யாழ் ஆயர் என்ற முறையில் தான் குறிப்பாக இரு விடயங்கள் பற்றி எடுத்துரைத்ததாகவும் கூறிய அவர், முதலாவதாக, போர் முடிந்து ஐந்து ஆண்டுகளும், மாநில அவை நிறுவப்பட்டு மூன்று ஆண்டுகளும் கடந்த நிலையிலும் சில அபிவிருத்தி நடவடிக்கைகள் தவிர்த்து எந்த வித அரசியல் தீர்வுகளும் தமிழர்களுக்கு முன்வைக்கவோ கொடுக்கப்படவோ இல்லை என்பதும், இரண்டாவதாக, தமிழர் குடிநிலங்களும், அவர்களது வழிபாட்டுத் தலங்களும் இராணுவத்தின் நில அபகரிப்புக்கு உள்ளாவதும் மிக வேதனைக்குரியது என்பதை அரசுத்தலைவரிடம் முறையிட்டதாகவும் ஆயர் சவுந்தரநாயகம் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Jaffna diocese








All the contents on this site are copyrighted ©.