2014-09-02 14:47:26

புனிதரும் மனிதரே – பிறந்ததும், 'பிறக்காதவர்' என்ற பெயர் பெற்றவர்


1204ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டின் போர்டெல்லா (Portella) என்ற ஊரில் பிறந்தவர் ரெய்மண்ட் (Raymond). இவர் பிறந்ததும், 'பிறக்காதவர்' என்று பொருள்படும் 'Nonnatus' என்ற பெயர் இவருக்குச் சூட்டப்பட்டது. இவரது தாய், பிரசவ நேரத்தில் இறந்ததால், குழந்தை ரெய்மண்டை தாய் உதரத்திலிருந்து 'செசேரியன்' முறையில் வெளியே கொணர்ந்தனர். இயல்பான வழியில் இவர் பிறக்காததால், 'பிறக்காதவர்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
'கருணையின் சபை' என்றழைக்கப்படும் துறவுச் சபையில் இணைந்த ரெய்மண்ட் அவர்கள், பார்பரி என்ற கடற்கரைப் பகுதியில் பிணையக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவர்களை மீட்பதற்குச் சென்றார். தான் எடுத்துச் சென்ற செல்வங்களைக் கொடுத்து, கிறிஸ்தவர்களை விடுவித்தார். இவர் கொண்டு சென்ற செல்வங்கள் அனைத்தும் தீர்ந்தபின், இவர் தன்னையே ஒரு பிணையக் கைதியாகக் கொடுத்து, மேலும் சிலரை விடுவித்தார்.
கைதியாக இருந்த வேளையில், சிறையிலிருந்தபடியே கிறிஸ்துவைப் பற்றி போதித்தார். அதைக் கேட்ட பல கைதிகளும், சிறை அதிகாரிகளும் கிறிஸ்தவர்களாக மாறினார். இதனால் ஆத்திரமடைந்த எனைய அதிகாரிகள், இவரது உதடுகளில் துளையிட்டு, அவற்றைப் பிணைத்து ஒரு பூட்டு மாட்டினர். இவரது துறவுச் சபையைச் சேர்ந்தவர்கள் இவருக்குரிய பிணையத் தொகையைச் செலுத்தி, இவரை விடுவித்தனர்.
இவரது புகழ் ஸ்பெயின் நாடெங்கும் பரவியதால், 1239ம் ஆண்டு இவர் இறந்ததும், இவரது உடலை எங்கே புதைப்பது என்ற பிரச்சனை எழுந்தது. எனவே, இவரது இறந்த உடலை, பார்வையற்ற ஒரு கோவேறு கழுதைமீது கிடத்தி, ஊருக்குள் அவிழ்த்துவிட்டனர். இவர் இளவயதில் அடிக்கடி சென்று வேண்டிவந்த சிறு கோவிலுக்கு அவரது உடலைச் சுமந்து சென்றது அந்தக் கோவேறு கழுதை. எனவே, ரெய்மண்ட் அவர்கள் அக்கோவிலில் புதைக்கப்பட்டார்.
1657ம் ஆண்டு புனிதராக உயர்த்தப்பட்ட ரெய்மண்ட் நோன்நாத்துஸ் (St Raymond Nonnatus) அவர்களின் திருநாள் ஆகஸ்ட் 31ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. செசேரியன் முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவர் பாதுகாவலராகக் கருதப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.