2014-09-02 15:40:16

திருத்தந்தை : அனைத்து மதங்களும் தங்கள் தனித்தன்மையுடன் இணக்க வாழ்வை மேற்கொள்ள முடியும்


செப்.02,2014. மதங்களுக்கிடையே அமைதியை உருவாக்கவும், மற்றும், ஒருமைப்பாட்டு உணர்வுடன் கூடிய உதவித் திட்டங்களுக்கு நிதிதிரட்டும் நோக்கத்துடனும் உரோம் நகரில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டப் போட்டி, ஒருவர் ஒருவரில் நம்பிக்கையையும், திறந்த மனப்பான்மையையும், உரையாடல், பகிர்வு ஆகியவற்றையும் ஊக்குவிக்கும் என்று பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மதங்களுக்கிடையே அமைதி என்ற மையக்கருத்துடன், உலகின் பல்வேறு நாடுகளையும், மதங்களையும் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள் இத்திங்கள் மாலை கலந்துகொண்ட விளையாட்டுப் போட்டிக்கு முன், அவர்களையும், பல நாடுகளிலிருந்து வந்திருந்த விருந்தினர்களையும் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து மதங்களும் தங்கள் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளும் அதேவேளையில், ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் மதிப்புடன் இணக்க வாழ்வை மேற்கொள்ள முடியும் என்பதற்கு இத்தகைய நிகழ்வுகள் உதவுவதாக உள்ளன என்று கூறினார்.
இன, மத, மொழி அடிப்படையில் மனிதர்கள், பாகுப்பாட்டுடன் நடத்தப்படும் நிலைகளைக் களைவதற்கு, ஒவ்வொரு விளையாட்டு வீரரும் முயலவேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திங்கள் இரவு உரோம் நகரின் ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் உலகக் கால்பந்து வீரர்களின் விளையாட்டு நடந்துகொண்டிருந்த வேளையிலும், ஒலி ஒளிச் செய்தி ஒன்றை அனுப்பியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியை வளர்க்கும் பேராவலுடன் நடத்தப்படும் இந்தப் போட்டிக்கு தன் மனமார்ந்த வாழ்த்துக்களை அனுப்புவதாக இச்செய்தியில் தெரிவித்தார்.
இவ்விளையாட்டுப் போட்டியில், முன்னாள் உலகக் கோப்பை கால்பந்தாட்ட வீரர்களான Diego Maradona மற்றும் Roberto Baggio உட்பட, 50 விளையாட்டு வீர்கள் கலந்துகொண்டு, அர்ஜென்டீனா நாட்டின் Buenos Aires நகரில் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கென பணியாற்றும் Scholas Occurrentes என்ற ஓர் அமைப்பிற்கு நிதி திரட்டினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.