2014-09-01 15:12:53

வாரம் ஓர் அலசல் – துணிச்சல்காரச் சிறார்கள்


செப்.01,201 RealAudioMP3 4. ஒரு பள்ளிச் சிறுவன் தேர்வு மதிப்பீட்டு அட்டையுடன் அன்று நகர இரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது மூன்று ஆசிரியர்கள், படிக்காத மாணவர்களை அடித்து உதைத்துத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று, சுண்டலையும் சுவைத்தபடி சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அதை அந்தச் சிறுவனும் கேட்டுக்கொண்டே வந்தான். அவர்களது கண்கள் அந்தச் சிறுவனின் தேர்வு மதிப்பீட்டு அட்டை மீது பாய்ந்தன. உடனே ஓர் ஆசிரியர் அவனிடம், “ஏண்டா, உங்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தக் ஸ்கூலுல சேர்த்திருப்பாரு, ஒரு பாடத்தில ஃபெயிலு. இதுல உனக்கு ஒரு செல்போன் வேறு. உனக்கெலாம் எதுக்குடா படிப்பு, பேசாம இந்த இரயிலிலிருந்து குதிச்சு சாகலாம்லா?” என்று சொன்னார். உடனே அருகிலிருந்த ஓர் இளைஞன் அவரிடம், “சிறுவன்ட்ட பேசுற பேச்சா சார் இது”என்று கடுமையாகக் கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர் “உன் வேலையைப் பாத்துக்கிட்டு சும்மா இரு” என்று சொல்லி அந்த இளைஞனின் வாயை மூடினார். பின்னர் அந்தச் சிறுவன் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எடுக்கும் பாடங்கள் பற்றிக் கேட்டான். பின்னர் அவர்களிடம், “நம்ம நாட்டு ஜன கன மன தேசியப் பாடலை எழுதினது யார் சார்? அது எந்த மொழியில இருக்கு? அந்தப் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா சார்? தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பொருள் என்ன சார்? சிலந்தி ஏன் சார் வலை கட்டுது? இப்படி கேள்விகளை அடுக்கினான். இரவீந்திரநாத் தாக்கூர் என்ற பதிலைத் தவிர வேறு எந்தக் கேள்விக்கும் ஆசிரியர்கள் பதில் சொல்லாமல் அசடு வழிந்தனர். அன்பு நேயர்களே, நம்மில் எத்தனை பேருக்கு ஜன கன மன பாடலுக்குப் பொருள் தெரியும் என்பது அடுத்த கேள்வி. பின்னர் அந்தச் சிறுவன் அந்த ஆசிரியர்களிடம், “இதற்கு நீங்கள் இந்த இரயிலிலிருந்து குதிச்சு சாகலாம், இப்படிப்பட்ட ஆசிரியர்களால்தான் நான் ஒரு பாடத்தில் ஃபெயில்”என்று பதில் சொன்னான் சிறுவன். பின்னர் வீட்டுக்குச் சென்ற அவன், அப்பாவிடம் தேர்வு மதிப்பீட்டு அட்டையைப் பயந்து கொண்டே காட்டினான். “அப்பா இந்தமுறை ஒரு பாடத்தில் ஃபெயில், அடுத்தமுறை நல்லாப் படிச்சு பாஸாயிடுவேன்”என்று சொன்னான். சிறிது நேரம் மகனைப் பார்த்த அப்பா, மதிப்பெண்தானே கண்ணா என்று சொல்லி வாரி அணைத்துக்கொண்டார். “மனிதன்”இணையபக்கத்தில் இரு நாள்களுக்கு முன்னர் இந்தக் குறும்படச் செய்தி பதிவாகியிருந்தது. இந்தச் சிறுவனின் துணிச்சல் எல்லாருக்கும் இருந்துவிட்டால்... என்ற தலைப்பும் அக்குறும்படத்தில் ஓடிக்கொண்டிருந்தது.
குடியரசுத் தலைவர்களிடமிருந்து மட்டுமல்லாமல், உலக அளவில் விருதுகள் பெறும் துணிச்சல்காரச் சிறுவர் சிறுமியர் நாடுகளில் இல்லாமல் இல்லை. ஆப்கான் சிறுமி மலாலா உட்பட பலரை நாம் கோடிட்டுக் காட்டலாம். கடந்த வார இறுதியில், பங்களூருவில் பெற்றோர் மீதே புகார் அளித்து சகோதரியைக் காப்பாற்றியிருக்கிறான் ஒரு துணிச்சல்காரச் சிறுவன். “சமூக விழிப்புணர்வுடன் துரிதமாகச் செயல்பட்டு தன் தங்கைக்கு மேலும் நடக்கவிருந்த கொடுமைகளைத் தடுத்திருக்கிறான் கல்வியறிவு இல்லாத அச்சிறுவன்” என்று தி இந்து நாளிதழில் பிரசுரமாகியிருந்தது.
அந்தச் சிறுவனின் சகோதரிக்கு வயது 14. பங்களூரு புது குருபன்னப்பாளையம் பகுதியில் இருந்த அந்த வீட்டில், தனது பெற்றோரே தனது சகோதரியை, திருமணம் எனும் போர்வையில் முதலிரவு அறைக்குள் அனுப்பிவைத்த கொடுமையை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கண்முன் நிகழும் அந்தக் கொடுமையைத் தடுப்பதற்கு, நரம்புகளில் கோபம் கொப்பளிக்க ஓட்டமும் நடையுமாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்றான் அவன். படிப்பறிவு இல்லை என்றாலும், குழந்தைத் திருமணக் குற்றத்தை காவல்துறையில் புகார் செய்யலாம் என்ற அறிவு அவனுக்கு இருந்ததால், லேஅவுட் காவல்நிலையத்தை அணுகினான். அப்போது இரவு மணி பத்து. அங்கிருந்த காவலர்களிடம் கிட்டத்தட்ட காலில் விழுந்த அவன் நிலைமையை வேகமாக எடுத்துரைத்தான். சிறுவனுடன் விரைந்த காவல்துறையினர், அந்த வீட்டில் அந்தக் கொடூரம் அரங்கேற ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கதவை படபடவென தட்ட வெளியே வந்தார் 24 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞர். அவரை நகர்த்திவிட்டு உள்ளே சென்ற காவல்துறையினர் அழுகையுடன் ஆடைகளை சரி செய்து கொண்டிருந்த சிறுமியைப் பார்த்ததுமே காலம் கடந்துவிட்டது புரிந்தது. இருந்தாலும், சிறுமியை மீட்டு குழந்தைகள் நல கமிட்டியின் உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளனர் காவல்துறையினர்.
“பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வு வரும்வரை குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியாது. ஆனால், இந்த பங்களூரு சிறுவன் போன்ற பிள்ளைகள் இருந்தால் சமூகக் குற்றங்கள் எதுவாக இருந்தாலும் தடுத்து நிறுத்தும் வாய்ப்பு உருவாகும்”. இப்படி தி இந்து நாளிதழில் கருத்துச் சொல்லப்பட்டிருந்தது. இந்தியாவில் சிறார் திருமணங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் குறைந்துவருகின்ற போதிலும், அந்தக் குறைவின் வேகம் மெதுவாக உள்ளதால், இந்தியாவில் சிறார் திருமணங்களை ஒழிக்க குறைந்தது ஐம்பது ஆண்டுகளாவது தேவைப்படும். இந்தியாவில், இருபதிலிருந்து இருபத்து நான்கு வயதுக்கு உட்பட்ட பெண்களில் 43 விழுக்காட்டினருக்கு சிறுமியராக இருக்கும்போதே திருமணம் நடந்துள்ளது என்று யுனிசெப் அமைப்பின் சிறார் திருமண ஒழிப்புப் பிரிவின் இந்திய அதிகாரி Dora Giusti தெரிவித்தார். மேலும், உலக அளவில் எழுபது கோடிக்கும் அதிகமான பெண்கள், தாங்கள் பதினெட்டு வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த ஜூலையில் யுனிசெஃப் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 30 இச்சனிக்கிழமையன்று ஐக்கிய நாடுகள் நிறுவனம், கட்டாயமாகக் காணாமல்போனவர்கள் தினத்தைக் கடைப்பிடித்தது. இன்று உலகில் 43 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வலுக்கட்டாயமாகக் காணாமல்போயுள்ளனர். அர்ஜென்டீனாவில் 1976 முதல் 1984 வரை நடந்த இராணுவ ஆட்சியில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். எல் சால்வதோரில் 1992ல் முடிந்த 13 வருட உள்நாட்டுச் சண்டையில் குறைந்தது 75 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதனால் கைவிடப்பட்ட சிறாரில் பலர், பத்தாயிரம் டாலருக்குக்கூட வெளிநாடுகளுக்கு, தத்து என்ற பெயரில் விலை போயினர். பிரிட்டனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய ஐந்தாயிரம் குழந்தைகள், காப்பங்களிலிருந்து காணாமல்போயுள்ளதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. பொதுவாக நாடுகளில், பள்ளிக்குச் செல்லும் சிறார் கடத்தப்படுகின்றனர். தாயுடன் கடைக்குச் செல்லும் குழந்தை காணாமல்போகிறது. இப்படி குழந்தைகளும் சிறாரும் காணாமல்போகின்றனர், பெற்றோர் காணாமல்போவதால் சிறார் கைவிடப்படுகின்றனர், இதனால் இச்சிறார் பல சமூகத் தீமைகளால் பாதிக்கப்படுகின்றனர், பல சமூகக் குற்றங்கள் புரியவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகி இருக்கிறது. எனவே, சிறாரை, குழந்தைப் பருவம் முதற்கொண்டு படிப்படியாக முதிர்ச்சியுடன் வளர்க்க வேண்டியது பெரியவர்களின் கடமையாகும். கங்காருபோல குட்டிகளைக் கெட்டியாக இழுத்துப் பிடித்தால், பிறகு அவை கீழே குதிப்பதற்கு விரும்பவே விரும்பாது. அதேபோல் குழந்தைகளுக்குத் தொடக்கத்தில் அரவணைப்பு தேவை. ஆனால், வளர வளர அவர்களை வாழ்க்கையின் நிஜங்களுக்குத் தயார்ப்படுத்துவது அவசியம்.
பருந்துகள் கூடு கட்டும்போது ஒரு நுட்பத்தைக் கையாளுகின்றன. முதலில், அவை கூர்மையான, குத்தக்கூடிய பொருள்களைக் கொண்டு தங்கள் கூட்டைக் கட்டுகின்றன. பிறகு, அவற்றின்மேல் கம்பளி போன்ற பொருட்களைப் பரப்புகின்றன. பின்னர் அவற்றுக்கு இரையான கோழி போன்றவற்றின் இறகுகளை அந்தக் கூட்டின்மீது பரப்புகின்றன. பின்னர் ஆடு, மாடு போன்றவற்றின் உரோமத்தைக் கொண்டு வந்து மேலே வைத்து, பஞ்சணை போன்ற சுகத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அழகான கூடு, சொகுசாக இருக்கும். அங்குதான் பருந்துகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. தொடக்கத்தில் அந்தக் குஞ்சுகள் இதமான அந்தச் சூழலில் வசதியாக வளர்கின்றன. பின்னர் தாய்ப் பருந்து, ஆடு மாடு போன்றவற்றின் உடல் உரோமங்களை நீக்கிவிடும். இப்போது சொகுசு கொஞ்சம் குறைந்துவிடுகிறது. சில நாள்கள் இதற்குக் குஞ்சுகள் பழகியதும், பறவைச் சிறகுகளையும் பருந்து அப்புறப்படுத்திவிடும். பின்னர், கம்பளி போன்ற மெத்தென்ற பொருள்களையும் அகற்றிவிடும். இறுதியாக, குத்தக்கூடிய பொருட்களோடு அந்தக் கூடு திகழும். குஞ்சுகள் போதிய அளவு வளர்ந்திருக்கும். அவை அந்தக் கூட்டில் சிரமப்படாமல் இருக்க, பறந்து சென்றுவிடும். இப்படித்தான் கழுகு தன் குஞ்சுகளை முதிர்ச்சியடைய வைக்கிறது. இப்படித்தான் நாமும் சிறிது சிறிதாக சிறாரைத் தயார் செய்யவேண்டும் என்கிறார் திருவாளர் வெ.இறையன்பு.
உழைப்பால் உயர்ந்த உத்தமர் அவர். நொபெல் விருது பெற்றவர். அவர் உரையாற்றுகின்றார் என்றால் மக்கள் கூட்டம் அலைமோதும். அப்படித்தான் அன்று அவர் உரையாற்றினார். வளாகம் முழுக்க கட்டுக்கடங்காத கூட்டம். அந்த மேதை மேடையேறி, உங்களில் யார் வெற்றி பெற விரும்புகின்றீர்கள் என்று முதலில் ஒரு கேள்வி கேட்டார். உடனே அத்தனை பேரும் கையுயர்த்தினர். உடனே அந்த மேதை சொன்னார்: “பின் ஏன் இங்கு வந்து நேரத்தை இப்படி வீணாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள். கடுமையாய் உழைக்க உடனே புறப்படுங்கள்” என்று.
அன்புச் சிறாரே, இந்த மேதையின் கட்டளை உங்களுக்கும்தான். ஒருமுறை பேரரசர் அலெக்சாந்தரிடம், நீங்கள் எப்படி சிறுவயதில் இத்தனை நாடுகளை வென்று சாதித்தீர்கள் என்று கேட்டார்களாம். அதற்கு அவர், எப்போதும் எதையும் தாமதிக்காமல் செயல்பட்டதால்தான் என்று பதில் சொன்னாராம். எனவே அன்புச் சிறாரே, “நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியைத் தள்ளி வைப்பது போலாகும்” என்பதால் எதையும் இன்றே இப்பொழுதே துணிச்சலுடன் செய்யுங்கள். உங்களது பொன்னான குழந்தைப்பருவத்தை இன்டெர்நெட் விளையாட்டுக்களுக்குள் முடக்கி விடாதீர்கள். சுவாமி விவேகானந்தர் சொல்கிறார் “என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.