2014-09-01 15:05:38

மியான்மாரில் இசைவழி நற்செய்தி அறிவிப்புத் திட்டம்


செப்.01,2014. மியான்மாரில் கிறிஸ்தவம் அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நாட்டுக் கவிஞர்கள் ஒன்றுகூடி இசைவழி நற்செய்தி அறிவிப்புத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளனர்.
பல்வேறுக் கலாச்சாரங்களின் பிரதிபலிப்பாக 'நாசரேத்தின் இயேசு' என்ற இசை நிகழ்ச்சியை அண்மையில் நடத்திய மியான்மார் இசைக்கலைஞர்கள், 'திருவெளிப்பாடு' என்ற இசை ஆல்பத்தையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.
நற்செய்தி அறிவிப்பின் 500ம் ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி நடத்தப்பட்ட இந்நிகழ்வுகள், அந்நாட்டின் ஏழு முக்கிய இனங்களைச் சேர்ந்த கலைஞர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
இசைத்திறமையை நற்செய்தி அறிவித்தல் பணிக்கெனப் பயன்படுத்துவதை இறைத்தூண்டுதலாகவே உணர்வதாக அறிவித்தார் மியான்மார் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமூகத்தொடர்புத் துறைத்தலைவர் அருள்பணி லியோ மாங்க்.
மியான்மாரில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு, 2010ம் ஆண்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கவேண்டும், எனினும், அப்போதைய அரசியல் சூழல்கள் அனுமதிக்காத நிலையில், அதனை தற்போது சிறப்பிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 1510ம் ஆண்டில் மியான்மாரில் முதன் முதலில் கிறிஸ்தவம் நுழைந்ததைக் கொண்டாடும் 500ம் ஆண்டு கொண்டாட்டங்கள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி துவக்கப்பட்டு, இவ்வாண்டு நவம்பர் 23ம் தேதி கிறிஸ்து அரசர் திருவிழாவுடன் நிறைவுக்கு வருகிறது.

ஆதாரம் : EWTN








All the contents on this site are copyrighted ©.