2014-09-01 15:09:02

புனிதரும் மனிதரே : நண்பரானாலும் குற்றம் குற்றமே(St.William of Roskilde)


அன்று டென்மார்க் நாட்டின் Roskilde நகரில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற சிலர் அந்நாட்டு அரசர் 2ம் Sweyn (1047-1074) பற்றித் தவறாக இகழ்ந்து பேசினர். இதையறிந்த அரசர் Sweyn, தீர விசாரிக்காமல் அவர்களைக் கல்லால் எறிந்து கொல்லும்படி கட்டளையிட்டார். அதுவும் இக்கொலைச் செயலை ஆலயத்திலே நடத்தினார். மறுநாள் அரசர் திருப்பலிக்குச் சென்றார். உடனே அந்நகரின் ஆயர் வில்லியம், “அநியாயமாய் பிறரின் இரத்தத்தைச் சிந்திய கொலைகாரனே! ஆலயத்தைவிட்டு வெளியேறு, எவ்வித விசாரணையுமின்றி நீ செய்த கொலைக் குற்றத்துக்குக் கழுவாய் தேடும்வரை திருநற்கருணை பெற முடியாது” என்று சொல்லி, அரசரை திருஅவைக்குப் புறம்பாக்குவதாக அறிவித்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அரசரின் படைவீரர்கள் திகைத்துப் போய், ஆயரை வெட்டுவதற்காக வாளை ஓங்கினார்கள். ஆயர் வில்லியம் மறுப்பேதும் சொல்லாமல் தலை வணங்கினார். திருஅவைக்காக, நீதிக்காக தனது உயிரையே கொடுக்க முன்வந்த ஆயரின் செயலைக் கண்டு வெட்கி மனம் வருந்தி, அரச ஆடையைக் களைந்து, வெறுங்காலுடன் நடந்து சென்று எல்லாருக்கும் முன்னிலையில் மன்னிப்புக் கேட்டார் அரசர் Sweyn. ஆயரும் அரசர் மீது விதித்தத் தடையை நீக்கினார். இத்தனைக்கும் அரசர் Sweyn அவர்களும், ஆயர் வில்லியம் அவர்களும் நெருங்கிய நண்பர்கள். இந்த நட்பின் காரணமாகவே, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர் வில்லியம் அவர்களை, டென்மார்க்கின் Roskilde நகரின் ஆயராக(10444ம் ஆண்டில்) உயர்த்தினார் அரசர். 11ம் நூற்றாண்டில் டென்மார்க், இங்கிலாந்தை ஆக்ரமித்த சமயத்தில், டென்மார்க் மக்கள் அறியாமையிலும், சிலைவழிபாட்டிலும் மூடநம்பிக்கையிலும் வாழ்ந்துவந்ததை அரசர் Sweyn மூலமாக அறிந்து அந்நாட்டுக்கு நற்செய்தியை அறிவிக்கச் சென்றவர் அருள்பணியாளர் வில்லியம். அப்படியே இவ்விருவரின் நட்பும் வளர்ந்தது. கத்தோலிக்கரான அரசர் Sweyn, சுவீடன் நாட்டு இளவரசியை மணக்க விரும்பினார். ஆனால் இவ்விருவரும் சகோதர, சகோதரி உறவுமுறை என்பதால் ஆயர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அச்சமயத்திலும் அரசர் தனது தவற்றுக்காக மன்னிப்பு வேண்டினார். புனிதரான ஆயர் வில்லியம் 1070ம் ஆண்டில் காலமானார். இவருக்கு முன்னரே இறந்த அரசரின் கல்லறை அருகில் ஆயரையும் அடக்கம் செய்தனர். அவர்களின் நட்பு அவ்வளவு நெருக்கமானது. Roskilde நகர் ஆயர் வில்லியம் அவர்களின் விழா செப்டம்பர் 2.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.