2014-09-01 14:55:59

திருத்தந்தை: உலகப்போக்குகளில் மூழ்கி சாரமற்ற உப்பாகிவிடாதீர்கள்


செப்.01,2014. உலகாயுதப்போக்குகளில் தங்களை இழந்து சாரமற்ற உப்பாக மாறிவிடாமல் கிறிஸ்தவர்கள் தங்களைச் சுற்றியிருப்பவைகளை மாற்றியமைக்கும் விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவர்கள் இவ்வுலகப் பாதையில் தங்களை இழந்துவிடாமல் கிறிஸ்துவின் பாதையில் அவரைப் பின்பற்றுபவர்களாக இருக்கவேண்டும் என தன் ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக போக்குகளில் தங்களை இழந்து, சாரமற்ற உப்பாகும் கிறிஸ்தவர்களால் எவ்விதப் பயனும் இல்லை என்றார்.
இயேசுவின் சிந்தனைக்கும் சீடர்களின் சிந்தனையோட்டத்திற்கும் இடையே விளங்கிய வேறுபாட்டை, இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் எடுத்துரைப்பது குறித்து, மூவேளை செப உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகப் போக்குகளை விட்டுவிட்டு இறைவிருப்பத்தை அறிந்துகொள்வதில் நாம் கவனம் செலுத்தவேண்டும் என்ற புனித பவுலின் வார்த்தைகளையும் மேற்கோள் காட்டினார்.
இறை வழியில் நாம் நடைபோட வேண்டுமெனில், நற்செய்தியின் வாழ்வாதாரத்தினால் நாம் தொடர்ந்து புதுப்பிக்கப்படவேண்டும் எனவும் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கான வழியாக, நற்செய்தியை தினமும் வாசிப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்..
ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரு கையடக்க விவிலியப் பிரதியை தங்களுடன் எப்போதும் வத்திருக்க வேண்டும் என்ற அழைப்பை மீண்டுமொருமுறை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.