2014-09-01 15:14:07

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்


செப்.01,2014. இந்திய அளவில், உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளதாக, மருத்துவத் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
கடந்த 2008 முதல் 2014 ஜூன் வரை, 485 பேரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன எனவும், இதில், 79 இதயம், 39 நுரையீரல், 443 கல்லீரல், 867 சிறுநீரகம், ஒரு கணையம், 500 இதய வால்வு, 732 கருவிழி, 5 தோல் என, 2,666 உறுப்புகள், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 -- 14ல் மட்டும் இதுவரை, 141 பேரிடம் பெற்ற, 21 இதயம், 21 நுரையீரல், 130 கல்லீரல், 243 சிறுநீரகம், 1 கணையம், 134 இதய வால்வு, 200 கருவிழி, ஒரு தோல் என, 751 உறுப்புகள் பாதிக்கப்பட்டோருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்தே, உடல் உறுப்புகள் அதிகமாக தானமாக பெற்று, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் நிலையில், கடந்த 2013 மார்ச் வரை, மூளைச்சாவு அடைந்த, 324 பேரின், 1,820 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன.
தமிழகத்தில், 2008ல், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்ததைத் தொடர்ந்து, உறுப்புகளை தானம் பெற, 72 மருத்துவமனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.