2014-08-30 15:37:18

பொதுக்காலம் 22ம் ஞாயிறு ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், வெளியிட்ட சுற்றுமடல்களில், இரண்டு புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. 1961ம் ஆண்டு அவர் வெளியிட்ட “Mater et Magistra” என்ற சுற்றுமடலும், 1963ம் ஆண்டு, நல்மனம் கொண்ட உலகமக்கள் அனைவருக்கும் விடுக்கும் ஓர் அழைப்பாக அவர் வெளியிட்ட “Pacem in Terris” சுற்றுமடலும் புகழ்பெற்றவை.
சமுதாயப் பிரச்சனைகள் பெருகிவந்த இவ்வுலகில், திருஅவை ஆற்றக்கூடிய, ஆற்றவேண்டிய பணிகளை விளக்குவது “Mater et Magistra”, அதாவது, "அன்னையும் ஆசிரியரும்" என்ற சுற்றுமடல். இம்மடல் வெளியான ஒரு சில வாரங்களில், ஒரு கத்தோலிக்க எழுத்தாளர், பத்திரிகையில் விமர்சனம் ஒன்றை வெளியிட்டார். அந்த விமர்சனத்தின் தலைப்பு : "அன்னை...சரி; ஆசிரியர்...வேண்டாம்" என்று அமைந்திருந்தது.
அளவுகடந்த அன்பைப் பொழியும் அன்னையாக திருஅவையை உருவகித்துப் பார்க்கையில் மனம் குளிர்கிறது. ஆனால், கண்டிப்புடன் பாடங்கள் புகட்டும் ஆசிரியராக திருஅவையை எண்ணிப் பார்க்கையில் கசக்கிறது. காயப்பட்டக் குழந்தைகளாக, அன்னையின் அணைப்பைத் தேடி, நாம் பலமுறை, கோவிலை, திருஅவையின் பணியாளர்களை அணுகிவந்துள்ளோம். ஆனால், காயப்பட்டதற்குக் காரணம் நாம்தான் என்று சுட்டிக்காட்டும் ஆசிரியராக திருஅவை ஒரு சில முறை மாறியபோது, அந்தக் கண்டிப்பை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
'அன்னை' என்ற இலக்கணத்தில், 'ஆசிரியர்' என்ற அம்சமும் இணைந்துள்ளது. எந்த ஓர் அன்னையும் தன் குழந்தைக்கு அளவுகடந்த அன்பை மட்டுமே எந்நேரமும் பொழிந்தால், அக்குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு அந்த அன்பே ஒரு தடையாக அமையும். தவறும்போது, தடுமாறும்போது அக்குழந்தைக்குத் தகுந்த வழியைக் காட்டுவதும் அன்னையின் பொறுப்பு. அவ்வேளைகளில், கரிசனை கலந்த கண்டிப்புடன் செயலாற்றும் ஓர் ஆசிரியராக அன்னை மாறவேண்டும்.

சென்ற ஞாயிறு, அன்னையாக விளங்கிய இயேசு, இந்த ஞாயிறு ஆசிரியராக மாறுகிறார். 'நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?' என்று கேட்ட இயேசுவுக்கு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உயர்ந்ததொரு விசுவாச அறிக்கையை வெளியிட்டார் பேதுரு. இயேசு அவரிடம், யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் என்று பேதுருவை வாழ்த்தினார் இயேசு. இந்த வாழ்த்துரையைக் கேட்டு, பேதுரு ஒரு கனவுப் பல்லக்கில் அமர்ந்து பவனி வந்திருப்பார். ஆனால், இது நடந்து ஒரு சில நிமிடங்களில், என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய் என்று இயேசு பேதுருவை அனல் தெறிக்கும் வார்த்தைகளில் கடிந்துகொண்டார். ஆனந்தத்தில் மிதந்த பேதுரு, அதிர்ச்சியில் உறைந்து நின்றிருப்பார். கனவில் தான் மிதந்துவந்த பல்லக்கிலிருந்து, படுகுழியில் விழுந்ததைப் போல உணர்ந்திருப்பார்.

பல்லக்கில் மிதந்ததற்கும், படுகுழியில் விழுந்ததற்கும் பேதுருவே காரணமாகிறார். இயேசுவை, 'மெசியா' என்று அறிக்கையிடுவதில் பெருமை அடைந்தார் பேதுரு. 'மெசியா' என்ற சொல்லுக்கு, 'அர்ச்சிக்கப்பட்டவர்' அல்லது, 'அருள்பொழிவு செய்யப்பட்டவர்' என்பது பொருள். இஸ்ரயேல் அரசர்கள் அனைவரும், அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள் என்பதை பேதுரு நன்கு அறிந்தவர். எனவே, அவர் இயேசுவை 'மெசியா' என்று அறிக்கையிட்டபோது, அவர் விரைவில் ஓர் அரசனாக அருள்பொழிவு பெறுவார் என்று உள்ளூர எண்ணியிருக்கலாம். அதுவும், விரைவில் தாங்கள் எருசலேம் நகரில் நுழைந்ததும், இந்தக் கனவு நனவாகி, இயேசு அரியணை ஏறுவார் என்ற எண்ணங்கள் அவர் உள்ளத்தை நிறைத்திருக்கலாம். பேதுரு சொன்ன வார்த்தைகளை ஆமோதிப்பதுபோல இயேசுவும் அவரை மனதாரப் புகழ்ந்தார். இயேசுவின் புகழுரை, பேதுரு அவரைப் பற்றிக் கொண்டிருந்த கனவை உறுதிப்படுத்தியிருக்கும்.

அந்நேரத்தில், அங்கு ஒரு திடீர் மாற்றம் நிகழ்கிறது. இயேசு, தான் எப்படிப்பட்ட 'மெசியா' என்பதையும், தனக்கு எருசலேமில் காத்திருக்கும் வரவேற்பைப் பற்றியும் விளக்க ஆரம்பிக்கிறார்:
மத்தேயு நற்செய்தி 16: 21
இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும், கொலை செய்யப்படவும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.
என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. இந்த வார்த்தைகள், பேதுருவுக்கும் சரி, நமக்கும் சரி, நற்செய்தியாக ஒலிக்கவில்லை.
இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத பேதுரு, இயேசுவுக்கு நடைமுறை வாழ்வுக்கு ஏற்ற சில அறிவுரைகள் தர விழைகிறார். இயேசுவுக்கு எவ்வித ஆபத்தும் வரக்கூடாது என்ற ஆதங்கத்தில் பேதுரு கூறிய அறிவுரைகளுக்கு இயேசுவின் பதில் ஏன் இவ்வளவு கோபமாக வெளிவந்தது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. தன் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பேதுருவை, இயேசு 'சாத்தானே' என்றழைப்பது, நம்மில் சில சிந்தனைகளைத் தூண்டுகிறது.

தன் பணிவாழ்வின் துவக்கத்தில் இயேசு பாலை நிலத்தில் சாத்தானைச் சந்தித்தார். அங்கு சாத்தான் தந்த மூன்று சோதனைகளையும், மேலோட்டமாகப் பார்த்தால், அவை ‘நல்ல’ சோதனைகள். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி சாத்தான் இயேசுவைத் தூண்டவில்லை.
குறுக்கு வழிகள், எளிதான வழிகள், உலகோடு சமரசம் செய்துகொள்ளும் வழிகள் இவையே சோதனையாக வந்தன. அதுவும், "நீ இறைமகன் என்றால், இவற்றைச் செய்யும்" என்ற ஒரு தூண்டிலைப் போட்டு, இயேசுவைப் பிடிக்க சாத்தான் முயன்றது.

இன்றைய நற்செய்தியிலும் அந்த பாலை நில அனுபவங்களின் எதிரொலிகளை நாம் உணரலாம். தன் பணிவாழ்வின் துவக்கத்தில் சாத்தான் வழியே வந்த சோதனைகளைச் சந்தித்த இயேசுவுக்கு, பணிவாழ்வின் இறுதிக் கட்டத்தில், அவர் எருசலேமை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தன் நெருங்கிய நண்பர் வழியே சோதனை வந்தது.
பேதுரு இயேசுவுக்கு வழங்கிய அறிவுரையும் தவறான அறிவுரை அல்ல. இயேசுவுக்கு எவ்வித ஆபத்தும் நேரக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன், ஆதங்கத்துடன் பேதுரு கூறிய அறிவுரை அது; நடைமுறைக்கு ஏற்ற அறிவுரை. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், "இயேசுவே, நீர் ஏன் தேவையில்லாத பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளவேண்டும்? உலகத்தோடு ஒத்துப்போக வேண்டியதுதானே!" என்ற பாணியில் பேதுரு அறிவுரை வழங்கினார்.

நமக்கு வரும் சோதனைகளும் இப்படிப்பட்டவையே. கொலைசெய்யவோ, கொள்ளை அடிக்கவோ, ஊழலில் ஊறிப் போகவோ நமக்குச் சோதனைகள் பெரும்பாலும் வருவதில்லை. உலகத்தோடு ஒத்துப் போவது, எளிய வழிகளை, குறுக்கு வழிகளைத் தேடுவது, அங்கும், இங்கும் சிறிது 'அட்ஜஸ்ட்' செய்து அநீதிகளோடு சமரசம் செய்துகொள்வது என்பவையே நமக்குப் பெரும்பாலான நேரங்களில் வரும் சோதனைகள். நமக்கு நெருங்கியவர்களிடமிருந்து இச்சோதனைகள் வரும்போது, இன்னும் சிக்கலாக மாறிவிடுகின்றன. அவர்கள் நம்முடைய நன்மைக்காகத்தானே சொல்கிறார்கள் என்ற போராட்டம் எழுகின்றது.

உண்மையான நீதி, அமைதி, அன்பு ஆகிய உயரிய சிகரங்களை அடைய குறுக்கு வழிகளோ, எளிதான பாதைகளோ கிடையாது. கடினமானப் பாதைகளில், தனித்துச் செல்லும் பயணங்கள் இவை. கிறிஸ்தவ விழுமியங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கியுள்ள Zig Ziglar என்ற புகழ்பெற்ற பேச்சாளர், இதே கருத்தை வேறுவிதமாகக் கூறியுள்ளார்: "மற்றவர்கள் அனைவரும் கூட்டமாக 'லிப்ட்'டைத் தேர்ந்தெடுக்கும்போது, நீ தனியாக அந்தச் சுழற்படியில் பயணம் செய்யவேண்டியிருக்கும்." இதைதான் இயேசுவும் ஒரு முறை, "வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே" (மத்தேயு 7:13-14) என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
இத்தகையதொரு வாயிலை, வழியை, பயணத்தை இயேசு மேற்கொண்டார். அவரைப் பின்பற்ற விழைவோருக்கும் இத்தகையப் பயணமே காத்திருக்கிறது என்பதை இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு கூறுகிறார்.
இயேசுவைத் தவறாகப் புரிந்துகொண்ட பேதுரு, அவரைத் தொடர்வதால், சிம்மாசனங்களும், சாமரங்களும் காத்திருக்கும் என்று கனவு கண்டார். அவருக்கு, இயேசு தந்த அதிர்ச்சி மருத்துவம், நம்மையும் விழிப்படையச் செய்கிறது. தன்னைப் பின்பற்ற விரும்புவோருக்கு, ஓர் இறைவாக்கினருக்குக் காத்திருக்கும் சவால்களை எவ்வித ஒளிவு மறைவின்றி இயேசு தெளிவாக்குகிறார்:
பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்என்றார்.

‘சவால்’ என்ற வார்த்தை நமக்குள் வீர உணர்வுகளை உருவாக்கலாம். நெருப்பில் குதிப்பது எளிது. எதோ ஒரு வேகத்தில் குதித்துவிடலாம். ஆனால், தொடர்ந்து நெருப்பில் நடந்து, அல்லது, அந்த நெருப்புடன் போராடி அதை வெல்வது மிகவும் கடினம். இறைவாக்கினர்கள் பலர் இந்தப் போராட்டத்திற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த சமுதாயம் சரியில்லை என்பதைத் துணிவுடன் எடுத்துச் சொல்லும் பணியை இறைவன் அவர்களுக்கு அளித்தார். பழைய ஏற்பாட்டுக் காலமானாலும், புதிய ஏற்பாட்டுக் காலமானாலும், நாம் வாழும் இன்றையக் காலமானாலும் சரி... சமுதாயம் சரியில்லை என்றும், அதைச் சரி செய்ய என்னென்ன செய்யவேண்டும் என்றும் இறைவாக்கினர் கூறும் உண்மைகள் அடிமைப்பட்டு, காயப்பட்டுக் கிடக்கும் சமுதாயத்தை நம்பிக்கையில் நிறைத்தன. அதே நேரம், இறைவாக்கினர்கள் சொன்னவை, ஆளும் வர்க்கத்தை, அதிகாரத்தில் இருந்தோரை அச்சுறுத்தின, ஆட்டிப் படைத்தன.
விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள் இறைவன் அளித்த இந்த ஆபத்தான பணியை ஏற்க மறுத்து ஓடி ஒளிந்தனர். ஆனாலும், அந்தப் பணியை நிறைவேற்றும் வரை இறைவன் அவர்களை விடவில்லை. இப்படி தன்னை இடைவிடாமல் துரத்தி வந்த இறைவனிடம் இறைவாக்கினர் எரேமியா பேசுவதை இன்றைய முதல் வாசகத்தில் இப்படி நாம் கேட்கிறோம்.

இறைவாக்கினர் எரேமியா 20: 7-9
ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் வன்முறை அழிவு என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.
அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன் என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

நான் வாயைத் திறந்தாலே உண்மைகளைச் சொல்ல வேண்டியுள்ளது, அதுவும் கசப்பான உண்மைகளைச் சொல்ல வேண்டியுள்ளது. ‘ஏன் எனக்கு வம்பு’ என்று பேசாமல் இருந்தாலும் உமது வார்த்தைகள் என் மனதில் நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார் எரேமியா. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிக்கும் இறைவாக்கினர் எரேமியாவைப் போல பல கோடி இறைவாக்கினர்கள் எண்ணியிருப்பர், சொல்லியும் இருப்பர்.

மனதுக்குச் சங்கடமான உண்மைகள் சொல்லப்படும்போது, உண்மையைச் சந்திக்க மறுத்து, நாம் ஓடி ஒளியலாம். அல்லது, அந்த உண்மையைச் சொன்னதால், உயிர் துறக்கலாம். இதையே இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு சவாலாக நமக்கு முன் வைக்கிறார். ஒரு கேள்வியின் வடிவில் இயேசு விடுக்கும் இந்தச் சவால், புனித பிரான்சிஸ் சேவியரைப் போல பல கோடி உன்னத உள்ளங்களை விழித்தெழச் செய்தது. இன்று இயேசு நமக்கு விடுக்கும் இந்தச் சவால், நமக்குள்ளும் மாற்றங்களை உருவாக்குமா? இதோ இயேசு நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் அந்த உன்னத சவால்:
மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மனிதர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று கனவு காணும் இறைவாக்கினர்கள் நம் மத்தியில் பிறக்க வேண்டும்... அந்தக் கனவை நனவாக்க, உண்மைகளை எடுத்துக் கூறும் இறைவாக்கினர்கள் நம் மத்தியில் இன்னும் பெருக வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.








All the contents on this site are copyrighted ©.