2014-08-30 17:01:45

சிரியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு: 30 லட்சம் பேர் அகதிகளாக தவிப்பு


ஆக.30,2014. சிரியாவில் தீவிரமடைந்துள்ள உள்நாட்டுப் போரால் அந்த நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர் எனத் தெரிவிக்கும் ஐ.நா. நிறுவனம், 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் புலம்பெயர்ந்தோராக தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறுகிறது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக 2011 முதல் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருவதால், இதுவரை 30 இலட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும், கடந்த ஓராண்டில் மட்டும் 10 இலட்சம் பேர் அகதிகளாகி உள்ளனர் எனவும் கூறினார், ஐ.நா.அவையின் புலம்பெயர்ந்தோர் மறுவாழ்வுத் துறைத் தலைவர் António Guterres.
லெபனானில் 10,14,000 பேரும், துருக்கியில் 8,15,000 பேரும், ஜோர்டானில் 6,08,000 பேரும் அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர். இவர்கள் தவிர ஈராக், எகிப்து உள்ளிட்ட நாடுகளிலும் இலட்சக்கணக்கானோர் உள்ளனர். உள்நாட்டிலேயே 65 இலட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக நோக்கும்போது, சிரியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் புகலிடம் தேடி வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
ஐ.நா. புள்ளிவிவரப்படி, அகதிகள் மக்கள் தொகையில் சிரியா முதலிடத்தில் உள்ளது. பாலஸ்தீனம் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிரியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 1,91,000 பேர் பலியாகி உள்ளனர்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.