2014-08-30 16:52:25

கிறிஸ்துவின் சாட்சிகளாக விளங்கும் அரசியல் தலைவர்களுக்கு, திருப்பீடச் செயலரின் பாராட்டுக்கள்


ஆக.30,2014. இவ்வுலகில் கிறிஸ்துவின் சாட்சிகளாக விளங்கி, கிறிஸ்தவ மதிப்பீடுகளையும் ஒழுக்க நெறிகளையும் வேரூன்றவைக்கும் அரசியல் தலைவர்களுக்கு, தன் பாராட்டுக்களை வெளியிட்டார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.
உலக கத்தோலிக்கச் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் 5வது கூட்டம் உரோம் நகருக்கு அருகேயுள்ள Frascatiயில் இடம்பெறுவதையொட்டி, அவர்களைச் சந்தித்து உரை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், மக்கள் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர்களின் வாழ்வு, கிறிஸ்தவ மதிப்பீடுகளால் வழிநடத்தப்பட்டு வருவது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.
அனைத்தையும் தன் மயமாக்கும் சுயநலமும், தன்னையே வெறுத்து, இறைவனை மையமாக்கும் நம் இறை அன்பும் எப்போதும் ஒன்றுக்கொன்று மோதிவரும் நிலையில், நாம் மனச் சோர்வின்றி செயல்பட புனித அகஸ்டின் அவர்களின் எடுத்துக்காட்டு நமக்கு உதவுகின்றது என்று கூறியத் திருப்பீடச் செயலர், திருஅவை தன்னுடைய பணியில் கிறிஸ்தவ அரசியவாதிகளின் தேவையை உணர்வதுபோல், கிறிஸ்தவ அரசியல்வாதிகளுக்கும் திருஅவையின் பராமரிப்பு தேவைப்படுகிறது என்று கூறினார்.
அனைத்துலகக் கத்தோலிக்க சட்டமன்ற உறுப்பினர் அமைப்பு, 2010ம் ஆண்டு ஆஸ்திரியக் கர்தினால், Christoph Schonborn அவர்களாலும், பிரித்தானியப் பிரபுக்கள் அவையின் கத்தோலிக்கப் பிரதிநிதி, David Alton அவர்களாலும் துவக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.