2014-08-30 17:08:11

இந்தியாவில் சிறார் திருமணங்களை ஒழிக்க 50 ஆண்டுகள் ஆகலாம்: யுனிசெப்


ஆக.30,2014. இந்தியாவில் சிறார் திருமணங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் குறைந்துவந்துள்ள போதிலும், அந்த குறைவின் வேகம் மெதுவாக உள்ளதால், இந்தியாவில் சிறார் திருமணங்களை ஒழிக்க குறைந்தது 50 ஆண்டுகளாவது தேவைப்படும் என்று யுனிசெப் அமைப்பின் சிறார் திருமண ஒழிப்புப் பிரிவின் இந்திய அதிகாரி Dora Giusti தெரிவித்தார்.
இந்தியாவில், 20லிருந்து 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 43 விழுக்காட்டினருக்கு சிறுமியராக இருக்கும் போதே திருமணம் நடந்துள்ளது என்றும், அங்கு சிறார் திருமண வழக்கத்தின் வீழ்ச்சி வேகம் ஆண்டுக்கு ஒரு விழுக்காடாக உள்ளதாகவும் யுனிசெப் அதிகாரி Giusti சுட்டிக்காட்டினார்.
இந்த வீழ்ச்சி வீதத்தின் அடிப்படையில், இந்தியாவில் சிறார் திருமணத்தை ஒழிக்க குறைந்தது 50 ஆண்டுகளாவது எடுக்கும் என்று கூறிய அவர், சிறார் திருமண வழக்கத்தை தடுக்கும் பணிகள் இன்னும் தீவிரமாக எடுத்து நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
சிறார் திருமணங்கள் பொதுவாக வட இந்தியாவிலேயே அதிகம் நடைமுறையில் இருந்து வருகின்ற போதிலும், சமீபத்திய அறிக்கைளின்படி, தெற்கு மாநிலமான கேரளாவில் சிறார் திருமணங்கள் விழுக்காடு சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 70 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, அவர்களின் 18 வயதுக்கு முன்னமே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் யுனிசெஃப் அமைப்பு கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.