2014-08-29 15:09:39

முதல் உலகப் போரின் நினைவாக, Redipuglia இராணுவக் கல்லறையைப் பார்வையிடுவார் திருத்தந்தை


ஆக.29,2014. வருகிற செப்டம்பர் மாதம் 13ம் தேதி, சனிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வடகிழக்கு இத்தாலியில் அமைந்துள்ள Redipuglia இராணுவக் கல்லறையைப் பார்வையிடும் நிகழ்வின் விவரங்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 13ம் தேதி காலை 8.00 மணிக்கு சம்பினோ விமானத் தளத்தலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 9 மணியளவில் Ronchi எனுமிடத்தில் உள்ள விமானத் தளத்தை அடைகிறார்.
9.15 மணிக்கு Redipuglia கல்லறைக்கு தனியேச் சென்று செபிக்கும் திருத்தந்தை, அருகில் உள்ள இராணுவ நினைவுக் கோவிலில் திருப்பலியாற்றி மறையுரை வழங்குகிறார்.
திருப்பலியின் இறுதியில், உலகின் அனைத்து போர்களிலும் இறந்தோரை நினைவுகூர்ந்து செபங்கள் சொல்லப்பட்ட பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கோவிலில் உள்ள ஆயர்களுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் எரியும் விளக்குகளை வழங்குவார் என்றும், இவ்விளக்குகள் முதல் உலகப் போரின் நினைவாக பல்வேறு மறைமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் உள்ள மிகப் பெரிய இராணுவக் கல்லறையான Redipugliaவில், முதல் உலகப் போரின்போது இறந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.