2014-08-29 15:14:39

மக்கள் உரிமைகள் இயக்கம் உருவானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட அமெரிக்க ஆயர் பேரவை திட்டம்


ஆக.29,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டில் மக்கள் உரிமைகள் இயக்கம் உருவானதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாட அமெரிக்க ஆயர் பேரவை திட்டமிட்டுள்ளது.
1964 மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளில் மக்கள் உரிமைகள் இயக்கத்தின் உச்சக்கட்ட நிகழ்வுகள் நடைபெற்றதைக் கொண்டாட, அடுத்த 12 மாதங்கள் பல்வேறு நிகழ்வுகளை அமெரிக்க ஆயர் பேரவை திட்டமிட்டு வருகிறது.
மக்கள் உரிமைகள் இயக்கத்தில் கத்தோலிக்கத் திருஅவையின் பங்களிப்பு குறித்தும் இந்தக் கொண்டாட்டங்களில் நினைவுகூரப்படும் என்று இக்கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கும் லுயிசியானா ஆயர், Shelton Fabre அவர்கள் கூறினார்.
மேலும், கத்தோலிக்கத் திருஅவை பல்வேறு சமுதாயப் படிப்பினைகளை உலகிற்கு வழங்கியுள்ளதையும் இந்தப் பொன்விழா ஆண்டில் மக்களுக்கு விளக்க, இந்தக் கொண்டாட்டங்கள் உதவும் என்று ஆயர் Fabre மேலும் எடுத்துரைத்தார்.
1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி கறுப்பின மக்களின் தலைவர், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள் வழங்கிய "எனக்கொரு கனவு உண்டு" என்ற உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவு, மக்கள் உரிமைகள் இயக்கம் தீவிரமாகச் செயல்பட பெரும் உந்துதலாக இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.