2014-08-29 15:16:40

உடைக்கமுடியாதது: ஹெயிட்டியில் நம்பிக்கையும், நலமும் வழங்கும் ஒரு கதை - ஆவணப் படம்


ஆக.29,2014. ஹெயிட்டியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை மையப்படுத்திய ஓர் ஆவணப் படம், அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆகஸ்ட் 30, இச்சனிக்கிழமையன்று வெளியிடப்படுகிறது.
The Knights of Columbus என்ற கத்தோலிக்க அமைப்பும், EVTV என்ற தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம், “Unbreakable: A Story of Hope and Healing in Haiti,” அதாவது, “உடைக்கமுடியாதது: ஹெயிட்டியில் நம்பிக்கையும், நலமும் வழங்கும் ஒரு கதை” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு, சனவரியில் ஹெயிட்டியைத் தாக்கிய 7.0 ரிக்டர் அளவு வலுவான நிலநடுக்கத்தால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், மற்றும் 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் தங்கள் உடல் உறுப்புக்களை இழந்தோரைத் திரட்டி, அவர்களைக் கொண்டு, Zaryen என்று பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு கால்பந்தாட்டக் குழுவைப் பற்றி இந்த ஆவணப் படம் விவரிக்கிறது.
Zaryen என்ற எட்டுக்கால் பூச்சி, தன் கால்களில் ஒன்றை இழந்தாலும், தொடர்ந்து வாழும் திறமை பெற்றது என்பதால், இந்த கால்பந்தாட்டக் குழுவிற்கு அப்பெயர் வழங்கப்பட்டது என்று The Knights of Columbus உறுப்பினர்களில் ஒருவர் கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.