2014-08-29 15:11:51

ஈராக்கில் நடைபெறும் வன்முறைகள், உலகில் நிகழும் வன்முறைகள் என்ற பனிப்பாறையின் மேல் நுனிப்பகுதியே - கர்தினால் Vegliò


ஆக.29,2014. ஒடுக்கப்பட்ட வறியோரின் குரல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும்படி, அவர்களைக் குறித்து நமது மறையுரைகளிலும், இன்னும் பல பொது உரைகளிலும் பேசுவதற்கு நாம் தயக்கமோ, சலிப்போ அடையக்கூடாது என்று திருத்தந்தை தன்னிடம் கூறியதாக வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நாடுவிட்டு நாடு செல்வோர் மேய்ப்புப்பணிக்காக செயலாற்றும் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Antonio Maria Vegliò அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தபின், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
ஈராக்கில் நடைபெறும் வன்முறைகள், உலகின் பல இடங்களில் நிகழும் வன்முறைகள் என்ற பனிப்பாறையின் மேல் நுனிப்பகுதியே என்று சுட்டிக்காட்டிய கர்தினால் Vegliò அவர்கள், உலகின் பல நாடுகளில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரல்களை நாம் கேட்பதில்லை என்று எடுத்துரைத்தார்.
தங்களையே காத்துக்கொள்ள முடியாத, வலுவிழந்த மக்களைக் காப்பது திருஅவையின் முக்கிய கடமை என்பதில் திருத்தந்தை மிகவும் உறுதியாக இருக்கிறார் என்று கூறிய கர்தினால் Vegliò அவர்கள், வன்முறையையே வாழ்வாகக் கொண்டுள்ளவர்களைத் தடுப்பதற்கு உலக அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.