2014-08-28 16:26:06

திருத்தந்தை பயன்படுத்திய 'மூன்றாம் உலகப் போர்' என்ற சொற்றொடர், உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது - பேராயர் சில்வானோ தொமாசி


ஆக.28,2014. 'மூன்றாம் உலகப் போரை நாம் அனுபவித்து வருகிறோம்' என்று திருத்தந்தை அண்மையில் பயன்படுத்திய சொற்றொடர், உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் செயலாற்றிவரும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றிவரும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், Zenit கத்தோலிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
ஆப்ரிக்க நாடுகள், சிரியா, ஈராக், மற்றும் உலகின் பல இடங்களில் வெடித்துள்ள ஆபத்தான மோதல்களை கவனத்திற்குக் கொணரும் வகையில் திருத்தந்தை அவர்கள் பயன்படுத்திய 'மூன்றாம் உலகப் போர்' என்ற எண்ணம், ஒவ்வொரு நாடும் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பை மட்டும் உறுதி செய்வதற்குப் பதில், உலகளாவிய அமைதியை உருவாக்கத் தூண்டுகிறது என்று பேராயர் தொமாசி அவர்கள் கூறினார்.
கீழை வழிபாட்டு முறை முதுபெரும் தந்தையரும், அமெரிக்க ஆயர்களும் வாஷிங்க்டனில் சந்திக்கும் வாய்ப்பு குறித்தும், 2015ம் ஆண்டு, திருத்தந்தை அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு குறித்தும், பேராயர் தொமாசி அவர்கள் இப்பேட்டியில் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதுவரை திருத்தந்தையர்கள் ஐ.நா. அவையில் ஆற்றிய உரைகள் அனைத்தும், உலகத் தலைவர்களை ஆழமாகப் பாதித்ததுபோல, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஐ.நா.அவையில் உரையாற்றினால் அதன் விளைவுகள் நல்லவிதமாய் அமையும் என்ற நம்பிக்கையை பேராயர் தொமாசி அவர்கள் வெளிப்படுத்தினார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.