2014-08-28 16:26:54

காசாப் பகுதியில் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் தோல்வியையே தழுவியுள்ளனர் - ஆயர் வில்லியம் ஷொமாலி


ஆக.28,2014. கடந்த ஏழு வாரங்களாக காசாப் பகுதியில் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினரும் வெற்றி பெறாமல், தோல்வியையே தழுவியுள்ளனர் என்பதை உணர்ந்திருப்பர் என தான் நம்புவதாக, எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை துணை ஆயர் வில்லியம் ஷொமாலி அவர்கள் கூறினார்.
இஸ்ரேல், பாலஸ்தீனா ஆகிய இரு தரப்பினரும் ஒருவருக்கு மற்றவர் தேவை என்பதையும், வன்முறைகளால் அல்ல, பேச்சு வார்த்தைகளாலேயே இரு தரப்பினரும் வாழ முடியும் என்பதையும் கடந்த ஏழுவார பலிகள் உணர்த்தியிருக்கவேண்டும் என்று ஆயர் ஷொமாலி அவர்கள் CNA என்ற செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடந்த 50 நாட்கள் தொடர்ந்த தாக்குதல்களின் விளைவாக, அப்பகுதியில் மருத்துவ உதவிகள் மிக அவசரத் தேவைகளாக உள்ளன என்றும், அதைத் தொடர்ந்து உணவு, உறைவிடம் என்ற மற்ற மனிதாபிமான உதவிகள் தேவை என்றும் ஆயர் ஷொமாலி அவர்கள் எடுத்துரைத்தார்.
மக்களின் உறைவிடங்களை மீண்டும் எழுப்புவதற்கும், குழந்தைகளின் மனநிலையில் உருவாகியுள்ள பாதிப்புக்களை நீக்குவதற்கும் தலத்திருஅவை முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஆயர் ஷொமாலி அவர்கள் தன் பேட்டியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.