2014-08-28 16:27:35

காசாப் பகுதியில் உள்ள குழந்தைகளின் பய உணர்வுகளைக் களைவது ஆசிரியர்களின் முதல் பணியாக அமையவேண்டும்


ஆக.28,2014. காசாப் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அப்பகுதியில் 2000த்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு உணவு வழங்கும் பணியில் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு ஈடுபட்டுள்ளது என்று இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அருள் பணியாளர் Raed Abusahlia அவர்கள் கூறினார்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் போர் நிறுத்தத்தை இரு தரப்பினரும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவர் என்று தான் நம்புவதாக, அண்மை கிழக்கு கத்தோலிக்க நற்பணிக் கழகத்தின் இயக்குனர் Sami El-Yousef அவர்கள் கூறினார்.
காசாப் பகுதியில் விரைவில் பள்ளிகள் துவங்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன என்று கூறிய El-Yousef அவர்கள், அப்பகுதியில் உள்ள 3,73,000த்திற்கும் அதிகமான குழந்தைகளின் மனதைச் சூழ்ந்துள்ள பய உணர்வுகளைக் களைவது ஆசிரியர்களின் முதல் பணியாக அமையவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
காசாப் பகுதியில் இச்செவ்வாய் மாலை 7 மணிமுதல் அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, இரு தரப்பிலிருந்தும் எவ்விதத் தாக்குதல்களும் இல்லை என்று சொல்லப்படுகிறது. எகிப்திலிருந்து காசாப் பகுதியில் நுழைவதற்கு தரப்பட்டுள்ள அனுமதியால், ஐ.நா.வின் உதவிகளும் அப்பகுதிக்குச் செல்கின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.