2014-08-28 16:30:55

ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பாடுகள் இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது: மலேசிய பிரதமர் சாடல்


ஆக.28,2014. ஐ.எஸ்.ஐ.எஸ். குழுவினரின் செயல்பாடுகள், இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அவர்கள் (Najib Razak) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"ஐ.எஸ்.ஐ.எஸ். நடவடிக்கைகள், இறைதூதர் முகமது நபியின் படிப்பினைகளுக்கு எதிராக இருக்கின்றன. இது இஸ்லாம் மதச்சட்டத்துக்கு எதிரானது. சிரியாவிலும், இராக்கிலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் எங்கள் மத நம்பிக்கை, கலாச்சாரம், அடிப்படை மனிதநேயத்திற்கு எதிராக அமைந்துள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.
மலேசியப் பெண்கள் மூன்று பேர், ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் பாலியல் தேவைக்காக தங்களை அப்படையுடன் இணைத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதன் பின்னணியிலேயே, மலேசிய பிரதமர் நஜீப், ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளை கடுமையாக சாடியுள்ளார்.
அல்காய்தா அமைப்பின் இருந்து பிரிந்து ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற கிளர்ச்சிப்படை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது, இராக், சிரியாவில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளன. சன்னி முஸ்லீம்கள் தலைமையிலான ஆட்சியை அமைக்க இவர்கள் முயன்று வருகின்றனர்.
இதற்கிடையே, சிரியாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டிருந்த 26 வயது அமெரிக்க இளம்பெண்ணை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். அவரின் பாதுகாப்பு கருதி அப்பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அப்பெண்ணின் குடும்பத்தினரும், அமெரிக்க அதிகாரிகளும் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி அவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரால் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரிடமும், வேறு தீவிரவாத இயக்கத்தினரிடமும் பல அமெரிக்கர்கள் பிணையக் கைதிகளாக பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.