2014-08-28 16:29:40

ஈராக்கில் நடைபெறுவது, ஒட்டுமொத்த மக்களினங்களின் படுகொலையே - சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை


ஆக.28,2014. சமயச் சுத்திகரிப்பு என்ற பெயரில், ஈராக்கில் நடைபெறுவது, ஒட்டுமொத்த மக்களினங்களின் படுகொலையே என்று குர்திஸ்தான் பகுதிக்கு அண்மையில் சென்று திரும்பிய சிரிய கத்தோலிக்க முதுபெரும் தந்தை மூன்றாம் இக்னாஸ் ஜோசெப் யூனான் அவர்கள் கூறினார்.
அப்பகுதியில் ஐந்து முதுபெரும் தந்தையர் மேற்கொண்ட பயணத்தின் முடிவில், Ankawa, Erbil ஆகிய நகரங்களில் தாங்கள் கண்டது, முழுமையான மனித உரிமை மீறல்களே அன்றி வேறெதுவும் இல்லை என்று முதுபெரும் தந்தை யூனான் அவர்கள் கூறினார்.
நினிவே பகுதியிலிருந்து விரட்டப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள், Yezidi இனத்தவர், ஷியா இஸ்லாமியர் மற்றும் Shabak இனத்தவர் ஆகிய சிறுபான்மைக் குழுவினர் அனைவரையும் கடந்த ஆறு நாட்கள் சந்தித்து வந்திருந்த முதுபெரும் தந்தையர், தாங்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இப்புதனன்று, பெய்ரூட்டில், தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டனர் என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையர் அனைவரும், செப்டம்பர் மாதம் 9 முதல் 11ம் தேதி முடிய, திருப்பீட கீழைவழிபாட்டு முறை திருப்பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்களுடன், வாஷிங்க்டன் நகரில் ஒரு முக்கியச் சந்திப்பை மேற்கொள்ளவிருக்கின்றனர் என்று CNS செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.