2014-08-27 15:36:20

மின்னணு சிகரெட்டுக்களால் நன்மைகள் உருவாகும் அதே நேரம், ஆபத்துக்களும் உள்ளன - WHO அறிக்கை


ஆக.27,2014. 'e-cigarette' என்றழைக்கப்படும் மின்னணு சிகரெட்டுக்களால் நன்மைகள் உருவாகும் அதே நேரம், ஆபத்துக்களும் உள்ளன என்று WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
புகையிலையால் உருவாக்கப்படும் சிகரெட்டுக்கள் உருவாக்கும் ஆபத்துக்கள், மின்னணு சிகரெட்டுக்களால் குறைக்கப்பட்டுள்ளன எனினும், வளர் இளம் பருவத்தினருக்கும், கருவில் குழந்தைகளைத் தாங்கும் அன்னையருக்கும் இது ஆபத்தை விளைவிக்கிறது என்று WHO நிறுவனத்தின் உயர் அதிகாரி, Douglas Bettcher அவர்கள் கூறினார்.
மின்னணு சிகரெட்டுக்களில் வெளியாவது வெறும் நீர்ப்புகை என்று விளம்பரங்கள் கூறுவது தவறான செய்தி என்றும், இவ்வகைச் சிகரெட்டுக்களும், 'நிகோட்டின்' எனப்படும் ஆபத்தான பொருளை சிறிதளவாகிலும் உள்ளிழுக்கச் செய்கின்றன என்று WHO அறிக்கை கூறுகிறது.
மேலும், மின்னணு சிகரெட்டுக்கள் பல்வேறு பழச்சுவைகளையும், மதுபானச் சுவைகளையும் கொண்டு 8000 சுவைகளுடன் விளம்பரப்படுத்தப்படுவது வளர் இளம் பருவத்தினரை அதிகம் கவரும் ஆபத்து உள்ளதென்று இவ்வறிக்கை மேலும் எச்சரிக்கிறது.
2005ம் ஆண்டு, சீனாவில் ஒரு சிறு அளவில் உருவான மின்னணு சிகரெட்டுக்கள், தற்போது உலகெங்கும் 466 நிறுவனங்களால், 300 கோடி டாலர்கள் திரட்டும் வர்த்தகமாக மாறியுள்ளன என்றும், இவற்றில், புகையிலை நிறுவனங்களும் ஆர்வம் காட்டிவருவது ஆபத்தானது என்றும் WHO நிறுவனம் எச்சரித்துள்ளது.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 13 முதல் 18ம் தேதி முடிய மாஸ்கோ நகரில் நடைபெறும் WHO பன்னாட்டுக் கருத்தரங்கில், மின்னணு சிகரெட்டுகள் குறித்த விவாதங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.