2014-08-27 15:34:37

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


ஆக.27,2014. ஆகஸ்ட் மாத வெயிலின் பொருட்டு இம்மாதத்தில் இரு புதன் பொதுமறையுரைகளை திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் நடத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் வெயில் சிறிது குறைந்து இருந்ததாலும், இம்மாதத்தின் முந்தைய புதன்களில் பெருமளவான மக்கள் அரங்கில் இடமின்றி திரும்பிச் செல்ல வேண்டியிருந்ததாலும் இவ்வாரம் புனித பேதுரு பேராலய வளாகத்திலேயே தன் புதன் மறையுரை சந்திப்பை மேற்கொண்டார். நமது கத்தோலிக்க விசுவாச அறிக்கையில் காணப்படும் திருஅவைப் பற்றிய வரிகளுக்கு விளக்கம் தருவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்புதன் மறையுரை இருந்தது.
'ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்கத் திருஅவையையும் விசுவசிக்கின்றேன்' என நாம் நம் விசுவாச அறிக்கையில் உரைக்கின்றோம். திருஅவையானது ஒன்றே, அது புனிதமானது என நாம் விசுவாச அறிக்கையிடுகின்றோம். திருஅவையானது ஒன்றே என நாம் கூறுவது ஏனெனில், முழு ஒன்றிப்பு மற்றும் ஐக்கியத்தின் மறையுண்மையை உள்ளடக்கிய மூவொரு கடவுளில் தன் மூலத்தைக் கொண்டுள்ளது அது. திருஅவை புனிதமானது, ஏனெனில், அது இயேசு கிறிஸ்துவால் உருவாக்கப்பட்டு, அவரின் தூய ஆவியால் உயிர்துடிப்பு அளிக்கப்பட்டு, அவரின் அன்பு மற்றும் மீட்பால் நிரப்பப்பட்டுள்ளது. திருஅவையின் அங்கத்தினர்களாகிய நாம், பாவிகளாக இருப்பதால், அதன் ஒன்றிப்பும் புனிதத்துவமும் இறைவனிடமிருந்தே வருவதோடு, நம் மனமாற்றத்திற்கும் தினமும் அழைப்புவிடுக்கிறது. நாம் இயேசுகிறிஸ்துவுடனும் தந்தையாம் இறைவனுடனும் ஒன்றிப்பில் வாழவும், நாம் ஒருவருக்கொருவர் ஒன்றிப்பில் செயல்படவும் இயேசுகிறிஸ்து நமக்காகச் செபிக்கிறார், குறிப்பாக, அவரின் பாடுகளின் வழியாக. பொறாமை, அழுக்காறு, வெறுப்பு ஆகியவை ஒன்றிப்புக்கு எதிரான பாவங்கள் என்பது நமக்குத் தெரியும். நம் பங்குத்தளங்களில்கூட இடம்பெறும் இவை, நாம் நம்மை அனைத்திற்கும் மையத்தில் வைப்பதால் உருவாகின்றன. ஆனால், இறைவிருப்பமோ, நாம் ஒருவரையொருவர் வரவேற்று, மன்னித்து, அன்புகூர்ந்து இயேசுவை ஒத்திருக்கவேண்டும் என்பதாகும். ஒருவர் ஒருவரில் இயேசுவின் சாயலைக் கண்டுகொள்வதே திருஅவையின் புனிதத்தன்மையாகும். நம் சமூகங்களில் பிரிவினைகளும் தப்பெண்ணங்களும் உருவாவதற்கு நாம் காரணமாக இருந்த நேரங்கள் குறித்து நம் மனச்சான்றை ஆழமாக ஆராய்ந்து, அதற்கென மன்னிப்பை வேண்டுவோம். அதேவேளை, இயேசுவுக்கும் தந்தையாம் இறைவனுக்கும் இடையேயான ஒன்றிப்பை ஆழகுச் செறிவுடனும் மகிழ்வுடனும் பிரதிபலிப்பதாக நம் உறவு நிலைகள் இருப்பதாக.
இவ்வாறு தன் புதன் மறையுரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.