2014-08-27 15:35:17

காசா பகுதியில் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதையொட்டி கொண்டாட்டம்


ஆக.27,2014. இஸ்ரேல் அரசுக்கும், பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையே கடந்த 50 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆயுத மோதல்கள் இச்செவ்வாய் முதல் நிறுத்தப்பட்டதை, காசா பகுதியில் வாழும் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடினர்.
ஜூலை 8ம் தேதி துவங்கிய இந்த கடுமையான ஆயுத மோதல்களில் இதுவரை 2,143 பாலஸ்தீனயர்களும் 69 இஸ்ரேல் இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இச்செவ்வாய் மாலை 4 மணி முதல் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
எகிப்து அரசின் முயற்சியால் நடைபெற்றுள்ள இந்த போர் நிறுத்தம் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் தன் மகிழ்வை வெளியிட்டு, தொடர்ந்து அப்பகுதியின் நிரந்தர அமைதிக்கு இருதரப்பினரும் கலந்துரையாடலை மேற்கொள்வர் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.
தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறிய 18 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரும்பிவந்ததால், காசா பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டது என்றும், அப்பகுதியில் உள்ள மசூதிகள் அனைத்தும் ஒலிப்பெருக்கிகள் வழியே இந்த போர் நிறுத்தத்தை அறிவித்தன என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : UCAN/AFP








All the contents on this site are copyrighted ©.