2014-08-27 15:30:00

உரோம் நகரில், பல மதங்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் கால்பந்தாட்டப் போட்டி


ஆக.27,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தூண்டுதலின் பேரில், பல நாடுகளையும், மதங்களையும், கலாச்சாரங்களையும் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் கால்பந்தாட்டப் போட்டி, செப்டம்பர் 1, இத்திங்களன்று உரோம் நகரில் நடைபெறவுள்ளது.
அர்ஜென்டீனா நாட்டில், மிக வறியக் குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்குக் கல்வி வசதிகள் செய்துதரும் Scholas Occurrentes என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டுப் போட்டியில், உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்ட பல வீரர்கள் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Scholas Occurrentes என்ற அமைப்பினருடன் இத்தாலியின் PUPI என்ற அமைப்பினரும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ்விளையாட்டுப் போட்டியில், இந்துக்கள், இஸ்லாமியர், புத்தர், யூதர், என்ற பல மதங்களைச் சார்ந்தவர்களுடன் கிறிஸ்தவர்களும் இணைந்து விளையாடுகின்றனர்.
உரோம் நகரின் ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் நடைபெறும் இப்போட்டியில் திரட்டப்படும் நிதி, Scholas Occurrentes என்ற அமைப்பினரின் பல்வேறு கல்விப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.