2014-08-27 15:32:55

இஸ்லாமிய மதம் வன்முறையை உள்ளடக்கிய மதம் என்று ஒரு சிலர் கூறிவருவது தவறு - ஜெர்மன் ஆயர் பேரவை


ஆக.27,2014. ஈராக்கில் நிகழ்ந்துவரும் பயங்கரவாதச் செயல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்றும், தங்கள் இல்லங்களைவிட்டு வெளியேற்றப் பட்டுள்ளவர்கள் விரைவில் தங்கள் சொந்த இல்லங்களுக்குத் திரும்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜெர்மன் ஆயர் பேரவை ஜெர்மன் அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
ISIS தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் Kurdish பகுதியினருக்கு ஜெர்மன் அரசு ஆயுதங்கள் அளிப்பதா என்ற விவாதம் ஜெர்மன் பாராளுமன்றத்தில் நடைபெற்றுவரும் வேளையில், ஜெர்மன் ஆயர்கள் இவ்விண்ணப்பத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுதங்கள் வழியே அமைதியை உறுதி செய்யமுடியாது என்பதை வலியுறுத்தும் ஜெர்மன் ஆயர்களின் விண்ணப்பம், அதேவேளையில், அர்த்தமற்ற வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகளை நிறுத்துவதும் உலக அரசுகளின் தார்மீகப் பொறுப்பு என்று கூறியுள்ளது.
ISIS என்ற தீவிரவாதக் குழுவும் இஸ்லாமிய மதமும் ஒன்றல்ல என்று கூறும் ஜெர்மன் ஆயர்கள், இஸ்லாமிய மதம் வன்முறையை உள்ளடக்கிய மதம் என்று ஒரு சிலர் கூறிவருவது தவறு என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.