2014-08-27 15:48:53

அமைதி ஆர்வலர்கள் : 1947ல் நொபெல் அமைதி பெற்ற அமெரிக்க நண்பர்கள் சேவை அமைப்பு(American Friends Service Committee)


ஆக.27,2014. FSC என்ற நண்பர்கள் தொண்டு அவையும்(Friends Service Council), AFSC என்ற அமெரிக்க நண்பர்கள் தொண்டு அவையும் (American Friends Service Committee) 1947ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்துகொண்டன. FSC என்ற நண்பர்கள் தொண்டு அவை, உலகப் போர்கள் சமயத்தில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள் பற்றி கடந்த வார நிகழ்ச்சியில் கேட்டோம். AFSC என்ற அமெரிக்க நண்பர்கள் தொண்டு அவை, அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்த நண்பர்கள் சமயக் கழக உறுப்பினர்களால் 1917ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. போர்களை எதிர்க்கும் ஆர்வலர்களும், இளம் நண்பர்களும், போர்க் காலத்தில் அன்புச் சேவையாற்றுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கத்தில் இந்த அமெரிக்க தொண்டு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. “ஒவ்வொரு மனிதரிலும் இறைவன் இருக்கின்றார், அன்பின் சக்தி அனைத்துப் போர்களுக்கான தருணத்தை எடுத்து விடுகிறது” என்ற நம்பிக்கையை ஒவ்வொரு Quaker நண்பரிலும் ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்க்காலாக இந்த அவை தனது பணியைத் தொடர்ந்தது. இந்த நண்பர்களின் சமயக் கழகம் தன்னிலே சிறியதாக இருந்தாலும், இதன் பணி, அந்த அவையின் எண்ணத்தோடு ஒத்துப்போகின்ற ஆயிரக்கணக்கான பல்வேறு இன மற்றும் நாடுகளின் மக்களின் ஆதரவினால் நடந்தது. இந்த ஆதரவாளர்கள் தங்களின் பொருளாதார மற்றும் ஆன்மீக வளங்களை வழங்கி, இதன் தொடர்ந்த பணிக்கு ஆதரவளித்தனர்.
இந்த AFSC அமெரிக்க நண்பர்கள் தொண்டு அவையின் செயல்திட்டங்கள் பல்வேறுபட்டவை. போரில் பலியானவர்களுக்கு இந்த அவை செய்த நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகளால் இதனைப் பலரும் அறிய வந்தனர். 1917ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இது தனது இளையோர் நண்பர் உறுப்பினர்களை பிரான்சுக்கு அனுப்பி, பிரித்தானிய நண்பர்கள் அமைப்போடு சேர்ந்து அகதிச் சிறார்க்கு உதவிகள் செய்யவும், குழந்தை பிறப்பு மருத்துவமனைகளை அமைக்கவும், போரில் இடிந்த வீடுகளைச் சீரமைத்து அவற்றை மீண்டும் கட்டவும், அகதிகள் மீண்டும் தங்கள் வாழ்வைத் தொடங்குவதற்குத் தேவையான பொருள்களைக் கொடுத்து உதவவும் ஊக்கப்படுத்தியது. 1918ம் ஆண்டில் முதல் உலகப்போர் முடிந்தபோது, இந்தத் தொண்டு அவையின் பணிகள் போரினால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளிலும் நடத்தப்பட்டன. இதன் உறுப்பினர்கள், இரஷ்யாவில் பஞ்சத்தாலும், நோயாலும் துன்புற்ற மக்களுக்கு உதவிகள் செய்தனர். போலந்திலும், செர்பியாவிலும் கருணை இல்லங்களை ஏற்படுத்தி வேளாண்மையில் மறுவாழ்வு பெற உதவினர். ஜெர்மனியிலும், ஆஸ்ட்ரியாவிலும் பசியால் வாடிய சிறார்க்கு உணவளித்தனர். இவ்வாறு இந்த அமெரிக்க தொண்டு அவையின் நண்பர்கள் இவ்விடங்களில் பணிகளை முடித்து தங்கள் நாடுகளுக்குத் திரும்பியபோது, பணிசெய்த இடங்களில் சிறு சிறு நண்பர்கள் தொண்டு மையங்களை உருவாக்கி, தங்கள் பணிகள் தொடர்ந்து இடம்பெறுமாறு செய்தனர். இந்த மையங்கள், போர்க் காலங்களில் நிவாரணப் பணிகளையும் செய்தன.
அமெரிக்க தொண்டு அவையின் நண்பர்கள், முதல் உலகப்போரின்போது சந்தித்தப் பிரச்சனைகளைவிட 1930களில் அதிகப் பிரச்சனைகளை எதிர்நோக்கினர். ஜெர்மனியின் ஹிட்லரின் அடக்குமுறைக்குப் பயந்து தப்பித்துவந்த அகதிகளுக்கு உதவிகள் செய்தனர். இஸ்பானிய உள்நாட்டுச் சண்டையின்போது இருதரப்பிலும் பாதிக்கப்பட்ட சிறாருக்கு உணவளித்தனர். பிரான்சுக்குத் தப்பியோடிய அகதிகளுக்கு உதவினர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், இந்த நண்பர்கள் ஐரோப்பாவின் பல நாடுகளில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டதோடு, இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். 1947ல், இந்தியாவில் வகுப்புவாதப் பிரிவினையால் தங்கள் வீடுகளை இழந்த அகதிகள் மீண்டும் குடியேற இவர்கள் உதவினர். 1948ல், காசா முனையில் அரபு அகதிகளுக்கு நிவாரணப் பணிகளைச் செய்தனர். கொரியப் போர், ஹங்கேரி புரட்சி, அல்ஜீரியச் சண்டை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த நண்பர்கள் உதவிகள் செய்தனர். AFSC அமெரிக்க அவையின் நண்பர்கள், 1966ல், வியட்நாம் உள்நாட்டுச் சண்டையில் காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்ட சிறார் மற்றும் அகதிகளுக்குப் பிறரன்புப் பணியாற்றினர்.
உலகில் மனிதரால் இடம்பெறும் மனிதமற்ற நடவடிக்கைகளுக்குப் பலியானவர்களுக்கு, AFSC அமெரிக்க நண்பர்கள் தொடர்ந்து பணியாற்றிவந்த அதேநேரம், போரினால் ஏற்படும் பதட்டநிலைகளைக் களையவதற்குத் திட்டங்களை வகுப்பதில் அதிகமதிகமாகக் கவனம் செலுத்தினர். பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளால் ஏற்படும் பதட்டநிலைகளைக் கண்டு, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், பாகிஸ்தான், இந்தியா, ஜாம்பியா, பெரு, மெக்சிகோ, அல்ஜீரியா போன்ற வளரும் நாடுகளுக்கு சமூக மற்றும் தொழில்நுட்ப உதவித் திட்டங்களிலும் கவனம் செலுத்தினர். ஹாங்காக், இந்தியா மற்றும் பிற நாடுகளில் குடும்பக்கட்டுப்பாடு திட்டங்களிலும் இந்த AFSC நண்பர்கள் ஈடுபட்டனர்.
ஐரோப்பா தொடங்கி ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் இதன் இளையோர் நண்பர்கள் தங்கள் பணிகளை விரிவுபடுத்தினர். அமெரிக்க பூர்வீக இனத்தவர், குடியேற்றதாரர், கைதிகள், கருப்பினத்தவர், ஏழைகள் போன்றோர் எதிர்நோக்கும் அநீதிகள் களையப்படவும் இவர்கள் உதவினர். AFSC அமெரிக்க நண்பர்கள் அவை, 1967ம் ஆண்டில் தனது பொன்விழாவைச் சிறப்பித்தது. “அன்பால் என்ன செய்ய முடியும் என்பதை நோக்கு” என்பது இந்த அவையின் விருதுவாக்காக மாறியது. அன்பர்களே, அன்பால் என்ன செய்ய முடியும் என்பதை நாமும் சிந்திப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.