2014-08-27 15:32:02

அனைத்து மதங்களும், உரையாடல் வழியில் சமயப் பணிகள் ஆற்றுவதே இன்றையத் தேவை - பிலிப்பின்ஸ் கர்தினால் Quevedo


ஆக.27,2014. ஈராக்கில் கிறிஸ்தவர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் எதிராக நடைபெறும் வன்முறைகளை, கண்டனம் செய்துவரும் உலக அமைப்பினருடன் தானும் இணைந்து இதனை வன்மையாகக் கண்டிப்பதாக பிலிப்பின்ஸ் நாட்டு கர்தினால் Orlando Quevedo அவர்கள் கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல்களை தீவிரமாகக் கண்டனம் செய்துள்ள கர்தினால் Quevedo அவர்கள், பெரும்பான்மை மதத்தவர் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளும் வன்முறைகளை மதத்தின் பெயரால் நியாயப்படுத்துவது மதத்திற்கே இழுக்கான ஒரு செயல் என்று கூறினார்.
தங்கள் மதமே தலைசிறந்தது என்ற எண்ணத்தில் ஏனைய மதத்தினரை மதிக்காமல் செயல்பட்ட பழங்காலத் தவறுகளிலிருந்து விடுபட்டு, அனைத்து மதங்களுக்கும் மதிப்பளித்து, உரையாடல்கள் வழியில் சமயப் பணிகள் ஆற்றுவதே இன்றையத் தேவை என்பதை கர்தினால் Quevedo அவர்கள் வலியுறுத்தினார்.
ஈராக்கில் நடைபெற்று வரும் வன்முறைகள் குறித்து பிலிப்பின்ஸ் அரசு இதுவரை தன் கண்டனத்தை வெளியிடாமல் இருப்பதற்கு, கர்தினால் Quevedo அவர்கள் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.