2014-08-26 15:48:22

விவிலியத்
தேடல் கொடிய குத்தகைக்காரர் உவமை பகுதி - 5


RealAudioMP3 'கொடிய குத்தகைக்காரர் உவமை'யில் நம் தேடலை நான்கு வாரங்களுக்கு முன் ஆரம்பித்தோம். எருசலேமில் இயேசு நுழைதல், கோவிலைத் தூய்மைப்படுத்துதல், அதிகாரம், குத்தகைக்காரர், என்ற எண்ணங்களை மையப்படுத்தி, கடந்த நான்கு வாரங்களாக நாம் மேற்கொண்ட தேடல்கள் இவ்வுவமைக்கு ஓர் அறிமுகமாக அமைந்தன. இன்று நாம் இவ்வுவமைக்குள் அடியெடுத்து வைக்கிறோம். இதோ இவ்வுவமையின் அறிமுக வரிகள்:
லூக்கா 20: 9
பின்பு இயேசு மக்களை நோக்கி இந்த உவமையைச் சொல்லத் தொடங்கினார்: ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு விட்டு நீண்ட காலம் நெடும் பயணம் மேற்கொண்டார்.
என்று நற்செய்தியாளர் லூக்கா இவ்வுவமையைத் துவக்குகிறார். இதே உவமையைக் கூறியுள்ள மத்தேயு, மாற்கு ஆகிய இருவரும், இன்னும் சிறிது விரிவாக இந்தத் திராட்சைத் தோட்டத்தை விவரிக்கின்றனர்:
மத்தேயு 21:33; மாற்கு 12: 1
மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
என்று மத்தேயு 21ம் பிரிவிலும், மாற்கு 12ம் பிரிவிலும் வாசிக்கிறோம்.

இயேசு இந்த அறிமுக வரிகளைக் கூறியதும், சூழ இருந்தோரின் நினைவுகளில் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் ஒலித்திருக்கும்.
எசாயா 5: 1-2
என் நண்பரைக்குறித்துக் கவி பாடுவேன்: என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப்பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன்: செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்: நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்: அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்: திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்: நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார்.

இஸ்ரயேல் இனத்தவரை ஒரு திராட்சைச் செடியாக, கொடியாக, தோட்டமாக உருவகிப்பது, அம்மக்களின் பாரம்பரியத்தில் இருந்த ஒரு பழக்கம். எடுத்துக்காட்டாக, திருப்பாடல் 80ல் நாம் காணும் வரிகள் இதோ:
திருப்பாடல் 80: 8-11
எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர். அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்; அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது. அதன் நிழல் மலைகளையும் அதன் கிளைகள் வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின. அதன் கொடிகள் கடல்வரையும் அதன் தளிர்கள் பேராறுவரையும் பரவின.

இஸ்ரயேல் மக்களின் பாரம்பரியத்தில் ஊறிப்போன இந்த உருவகத்தை இயேசு இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் சென்றார். இறை தந்தையால் நட்டு வளர்க்கப்படும் ஒரு திராட்சைச் செடியாக தன்னையும், சீடர்களை, அச்செடியின் கிளைகளாகவும் உருவகித்துப் பேசினார்.


யோவான் 15: 1,5
உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.

இஸ்ரயேல் மக்களின் உணர்வில் ஆழப் பதிந்திருந்த 'திராட்சைத் தோட்டம்' என்ற உருவகத்தை, இறைவாக்கினர் எசாயா ஒரு 'காதல் பாட்டாக'த் துவக்குகிறார். ஆனால், விரைவில் அப்பகுதி, குறைகளைப் பட்டியலிடும் ஒப்பாரிப் பாடலாக மாறுகிறது:
எசாயா 5: 2-4
என் நண்பர்... நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார். இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்: எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள். என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?

அழகியத் திராட்சைத் தோட்டமாக இறைவன் உருவாக்கிய இஸ்ரயேல் குடும்பத்தினர், நீதியும், நேர்மையும் இன்றி நடந்துகொண்டனர் என்று இறைவாக்கினர் எசாயா முறையிடுகிறார்:
எசாயா 5: 7
படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே: அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே: நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்: ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி: நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்: ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.

'ஒருவர் திராட்சைத் தோட்டம் போட்டு, தோட்டத் தொழிலாளர்களிடம் குத்தகைக்கு விட்டார்' என்று இயேசு இவ்வுவமையைத் துவக்கியதும், சூழ இருந்தவர்கள் மனங்களில், திருப்பாடல் 80ன் வரிகளும், இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளும் வலம் வந்திருக்கும்.

பழைய ஏற்பாட்டின் பல இடங்களில் சொல்லப்பட்ட திராட்சைத் தோட்டமான இஸ்ரயேல் குடும்பம், இறைவனின் நேரடி கண்காணிப்பில் இருந்தது. இயேசுவோ அந்தப் பாரம்பரிய உருவகத்தில் ஒரு திருப்பத்தைத் தருகிறார். திராட்சைத் தோட்டத்தின் பொறுப்பை, உரிமையாளர், குத்தகைக்காரகளிடம் ஒப்படைக்கிறார். அது மட்டுமல்ல, பொறுப்பை ஒப்படைத்தக் கையோடு, உரிமையாளர் "நெடும் பயணம் மேற்கொண்டார்" என்று மூன்று நற்செய்தியாளர்களும் குறிப்பிடுகின்றனர்.
உரிமையாளரின் சார்பில் பொறுப்பாகச் செயல்பட வேண்டிய குத்தகைக்காரர்கள், உரிமையாளருக்கு எதிராகச் செயல்படுகின்றனர். திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்த தொழிலாளர்கள், மதத் தலைவர்கள் என்று இயேசு குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், மக்கள் அதனை நன்கு உணர்ந்திருப்பர். குத்தகைக்காரர்களான மதத் தலைவர்கள், எவ்விதம் நடந்துகொண்டனர் என்பதை இயேசு தன் உவமையில் படிப்படியாக விளக்குகிறார்:


லூக்கா 20: 10-12
பருவகாலம் வந்ததும் ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும் நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மூன்றாம் முறையாக அவர் ஒருவரை அனுப்பினார். அவரையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினர். பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், ‘நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்என்று சொல்லிக்கொண்டார். தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நம்முடையதாகும்என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். எனவே அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள்.

இறைவாக்கினர் எசாயா விவரிக்கும் அந்தத் தோட்டத்தில், இறைவன் தன் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தார். அங்கு அவர் திராட்சைக் கனிகளை எதிர்பார்த்து சென்றபோது, கனிகளுக்குப் பதில், காட்டுப் பழங்களே அங்கு காய்த்திருந்தன.
இயேசுவின் உவமையிலோ, திராட்சைத் தோட்டத்தில் நல்ல கனிகள் விளைந்திருந்தன என்பதை இயேசு சொல்லாமல் சொல்லியுள்ளார். அதாவது, இஸ்ரயேல் மக்கள், இறைவன் எதிர்பார்த்தபடியே நல்ல கனிகளாக வளர்ந்திருந்தனர். ஆனால், விளைந்த கனிகளை, தோட்டத்து உரிமையாளரான இறைவனுக்குத் தராமல் வன்முறைகளைப் பதிலாகத் தந்தனர், மதத் தலைவர்கள் என்பதை இந்த உவமை தெளிவாக்குகிறது.
தனக்குச் சேரவேண்டிய பங்கைக் கேட்பதற்கு, தோட்ட உரிமையாளர் தன் பணியாளரை, தனித் தனியாக அனுப்புகிறார். மோசே துவங்கி, திருமுழுக்கு யோவான் முடிய இறைவன் அனுப்பிய பணியாளர்கள் அனைவருமே தனி மனிதர்களாக வந்தவர்கள். இவர்களை நினைவுறுத்தவே, பணியாளர்கள் தனியே வந்தனர் என்றும், அவர்கள் அனைவருமே குத்தகைக்காரர்களின் வன்முறைக்கு உள்ளாயினர் என்றும் இயேசு குறிப்பிடுகிறார். குத்தகைக்காரர்களான மதத் தலைவர்கள் வெளிப்படுத்திய இந்த வன்முறையை நம் அடுத்தத் தேடலில் சிறிது ஆழமாகச் சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.