2014-08-26 15:48:16

புனிதரும் மனிதரே - இயேசுவிடம் நற்சான்றிதழ் பெற்ற புனிதர் - புனித பர்த்தலமேயு (நத்தனியேல்)


திருத்தூதர்களில் ஒருவரான பர்த்தலமேயு அவர்களின் இயற்பெயருக்கு, "உழுத நிலத்தின் மகன்" என்பது பொருள். இவர் வேளாண்மையில் ஈடுபட்டிருந்த குடும்பத்திலிருந்து வந்தவராக இருக்கலாம். முதல் மூன்று நற்செய்திகளில், பர்த்தலமேயு என்ற பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ள இவர், யோவான் நற்செய்தியில் மட்டும், ‘நத்தனியேல்’ என்ற பெயருடன் அழைக்கப்பட்டுள்ளார். இவருக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழும் முதல் சந்திப்பின்போது, (யோவான் 1:45-51) இயேசு நத்தனியேலைக் கண்டதும் உயர்ந்ததொரு சான்றிதழ் வழங்குவதைக் காண்கிறோம். நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்று அவரைக் குறித்துக் கூறினார் (யோவான் 1:47) என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுள்ளார். இயேசுவால் சான்றிதழ் வழங்கப்பட்ட 'நத்தனியேல்' என்ற பெயருக்கு, 'கடவுளால் வழங்கப்பட்டவர்' என்று பொருள்.
இயேசு விண்ணேற்றம் அடைந்தபின், திருத்தூதர் பர்த்தலமேயு அவர்கள், இந்தியாவின் கொங்கணக் கடற்கரைப் பகுதியிலும், மும்பை பகுதியிலும் கிறிஸ்துவைப் போதித்தார் என்று, 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஜெரோம் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து, ஆர்மேனியாவுக்குச் சென்ற பர்த்தலமேயு அவர்கள், அங்கு மறைசாட்சியாக உயிர் துறந்தார்.
இவர் ஆர்மேனியாவில் கிறிஸ்துவைப் போதித்தபோது, இவர் போதனையைக் கேட்ட, அந்நாட்டு மன்னர் பொலிமியுஸ் (Polymius) மனம் மாறி, திருமுழுக்கு பெற்றார். இதனால் ஆத்திரம் அடைந்த, மன்னரின் சகோதரர் அஸ்தியாஜெஸ் (Astyages), பர்த்தலமேயு அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். திருத்தூதர் பர்த்தலமேயு அவர்களை, உயிரோடு தோலுரித்து, சிலுவையில் தலைகீழாக அறைந்து கொன்றனர் என்று பாரம்பரியம் சொல்கிறது. புகழ்பெற்ற ஓவியர் மிக்கேலாஞ்சலோ அவர்கள், சிஸ்டின் சிற்றாலயத்தில் தீட்டியுள்ள உலகப் புகழ்பெற்ற 'இறுதித் தீர்வை' என்ற ஓவியத்தில், புனித பர்த்தலமேயு அவர்கள், உரிக்கப்பட்ட தன் தோலைக் கைகளில் ஏந்தியபடி நிற்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளார்.
திருத்தூதர் பர்த்தலமேயு, அல்லது, நத்தனியேல், ஆர்மேனியா நாட்டின் பாதுகாவலர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். புனித பர்த்தலமேயு அவர்களின் திருநாள், ஆகஸ்ட் 24ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.