2014-08-26 15:52:03

தள்ளாத வயதிலும் தளராத யோகா - நானம்மாள்


ஆக.26,2014. கோயம்புத்தூரைச் சேர்ந்த 94 வயது நிறைந்த நானம்மாள் பாட்டி தன் உடம்பை நாணில் இருந்து புறப்படுகிற அம்புபோல உறுதியுடன் வைத்திருக்கிறார். கைகள் இரண்டையும் தரையில் ஊன்றியபடி முழங்கால்களை மடித்து அந்தரத்தில் நிற்கிறார். ஹாலாசனம், சிரசாசனம், பத்மாசனம், பாதஹஸ்தாசனம் என்று 50-க்கும் மேற்பட்ட ஆசனங்களை இப்போதும் தொடர்ந்து செய்துவருகிறார்.
கோவை கணபதி பகுதியில் குடியிருக்கும் நானம்மாள் பாட்டியின் சொந்த ஊர் பொள்ளாச்சி காளியாபுரம். இவருடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே யோகா பயிற்றுநர்கள் என்பதால் நடைபழகிய வயதில் இருந்தே நானம்மாள் யோகாவையும் பயின்றார்.
பிறந்த வீட்டில் பயின்ற கலையை, புகுந்த வீட்டுக்குச் சீதனமாக எடுத்துவந்தார். சித்த வைத்தியக் குடும்பத்தைச் சேர்ந்த தன் கணவருக்கும் யோகாவைக் கற்றுத்தர, அவரும் மனைவியுடன் இணைந்து மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுத்துள்ளார். நானம்மாள் பாட்டியிடம் யோகா கற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தொடுகிறது.
திருப்பூரில் இன்டர்நேஷனல் யூத் யோகா ஃபெடரேஷன் சார்பாக 2012-ல் நடந்த போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருக்கிறார். அதில் வெற்றிபெற்றதன் விளைவாக, 2013 பிப்ரவரியில் அந்தமான் சென்று, அங்கு 60 பேர் கலந்துகொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
இவருடன் இணைந்து வீட்டில் யோகா மையத்தை நடத்திவரும் இவருடைய மூன்றாவது மகன் பாலகிருஷ்ணன், “என் அம்மாவின் யு-டியூப் வீடியோவை இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள் என்பது பெருமையாக இருக்கிறது!’’ என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம் : The Hindu








All the contents on this site are copyrighted ©.