2014-08-25 15:46:53

வாரம் ஒர் அலசல் இனி அடிமை என்று யாரும் இல்லை...


RealAudioMP3 ஆக.25,2014. வீட்டுக்குள்ளேயே உறவுகளைத் தேட ஆளில்லாத இந்தக் காலத்தில் சென்னையில் 25 குடும்பங்கள் மாதத்தில் ஒருநாள் நிலா விருந்து கொடுத்து சொந்தங்களைப் புதுப்பித்து பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் போற்றுகின்றன. மனதுக்கு மகிழ்ச்சி தந்த இத்தகவலை, தி இந்து நாளிதழில் கடந்த வியாழனன்று வாசித்தோம். இந்த நிலா விருந்து குழுவுக்கு அடித்தளமிட்டிருப்பவர் ‘நகரத்தார் மலர்’ பத்திரிகையின் ஆசிரியர் இளங்கோவன். இந்த நிலா விருந்துக் குழு அமைப்பாளர் அரசு அழகப்பன் இது குறித்து இப்படி விளக்குகிறார்...

“அனைவருக்குமே பணிச்சுமைகள் அதிகரித்துவிட்டன. இதன்காரணமாக சொந்த பந்தங்களோடு உட்கார்ந்து பேசக்கூட முடியவில்லை. ஒரே ஊரில் இருந்தாலும் ஒருவரையொருவர் சந்திக்க முடியவில்லை. என்னுடைய அப்பத்தாவும் ஆயாவும் எனக்கு நிலா சோறு ஊட்டி கதை சொல்வார்கள். ஒரு கவளம் சோற்றுக்கு ஒரு சேதியை எனக்குப் புரியவைப்பார்கள். ஆனால், இன்றைக்கு குழந்தைகளுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. எல்லோரும் ஆளுக்கொரு திசையில் இருக்கிறோம். எனவே, குறைந்தபட்சம் நம் சொந்தங்களுக்குள்ளாவது கூடிப் பேசி உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளலாமே என்பதற்காகத்தான் இந்த ‘நிலா விருந்து’. தொடக்கத்தில் பவுர்ணமி நாளில்தான் இந்த விருந்தை வைத்திருந்தோம். ஆனால், சிலருக்கு அந்த நாளில் வருவது சிரமமாக இருந்ததால் இப்போது, பவுர்ணமிக்கு அடுத்து வரும் விடுமுறை நாளில் நிலா விருந்து வைக்கிறோம். இந்தக் குழுவில் 25 குடும்பங்கள் இருக்கின்றன. மாதம் ஒரு வீட்டில் நிலா விருந்து இருக்கும். ஒரு மாதம் விருந்து முடியும்போதே அடுத்த மாதம் யார் வீட்டில் விருந்து என்பதை சொல்லிவிடுவார்கள். இதுவரை 27 நிலா விருந்து நிகழ்ச்சிகள் நடந்து முடிந்திருக்கின்றன. இன்னும் சிலரும் இந்தக் குழுவில் சேர முன்வந்தார்கள். ஆனால், 25 குடும்பங்கள்தான் வரையறை என்பதால் அவர்களைத் தனியாக ஒரு குழுவை உருவாக்கச் சொல்லி இருக்கிறோம். மாதத்தில் ஒருநாள் இப்படிக் கூடிக் கலைவதை நாங்கள் மாத்திரமல்ல.. எங்கள் குழந்தைகளும் வீட்டுப் பெரியவர்களும் ரொம்பவே ரசிக்கிறார்கள். அந்தளவுக்கு பல நல்ல அனுபவங்களை இந்த நிலா விருந்து எங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது”

இவ்வாறு அரசு அழகப்பன் அவர்கள் விளக்கியிருக்கிறார். இக்கால இயந்திரத்தனமான வாழ்க்கையில், உறவுகள் யார் என்றுகூட வளரும் தலைமுறைக்குத் தெரியாமல் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில் உறவுகள் ஆளுக்கொரு திசையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால், யாரை என்ன உறவுமுறை சொல்லி அழைப்பது என்றுகூட தெரியவில்லை. அப்படிப்பட்ட சூழலில் செட்டிநாட்டுப் பகுதியின் குடும்பங்கள் கொண்டாடும் இந்த நிலா விருந்துப் பழக்கங்கள் வளரட்டும் என நாமும் வாழ்த்துவோம். அதேநேரம் எல்லாரும் ஒரே கடவுளின் குழந்தைகள், எல்லாரும் சகோதர சகோதரிகள் என்று நோக்கும் பண்புகள் இன்று நலிவடைந்து வருவதையும் பார்க்கிறோம். சில மனிதர்கள் வன்மங்களை உள்ளங்களில் தேக்கி, அவற்றைத் தீவிரவாதமாக்கி கண்மூடித்தனமாக மாபாவங்களைச் செய்கின்றனர். கடந்தவாரத்தில் இணையதளங்களில் வெளியாகிய, ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகளால் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி என்பவர் சிரியாவில் படுகொலை செய்யப்படும் 'வீடியோ' காட்சியைப் பார்த்த எந்த மனிதம் கொண்ட மனிதரும் பதறாமல் இருக்கமாட்டார். அமெரிக்க, 'பிரிலான்ஸ்' பத்திரிகையாளரான ஜேம்ஸ் போலே, கடந்த 2012ம் ஆண்டு நவம்பரில், சிரியாவுக்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது அவரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சிறைப்பிடித்தனர். இவரது உயிருக்கு ஈடாக, 13 கோடியே 20 இலட்சம் டாலரை($132m) பிணையல்தொகையாக இவரது குடும்பத்தினரிடம் இந்தத் தீவிரவாதிகள் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஐஎஸ்ஐஎஸ். தீவிரவாதிகளின் கொலை மிரட்டல்களால் ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு அகதிகளாக வேறிடம் சென்றுள்ளனர்.

அன்பர்களே, இன்றைய தொழில்நுட்ப உலகில், தீவிரவாதக் கும்பல்கள், அப்பாவி மக்களை, ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அடிமைகளாக வைத்துள்ளன. அதோடு மனித வணிகம், கொத்தடிமை, கட்டாயத் தொழில், பாலியல் வன்கொடுமை, குழந்தைத் தொழில், குழந்தைத் திருமணம் போன்ற பலவகையான அடிமைத்தன முறைகளையும் பண முதலைகள் அரங்கேற்றி வருகின்றன. 188 நாடுகளில் நடக்கும் மனித வணிகத்தை ஆய்வு செய்து இந்த 2014ம் ஆண்டு, ஜூனில் ஓர் அறிக்கை வெளியானது. இக்காலத்தில் மனித வணிகத்தால் மூன்று கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் Floridaவைச் சேர்ந்த Keishaவுக்கு வயது 16. இச்சிறுமி, தனது வளர்ப்புக் குடும்பத்தில் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக, ஈராண்டுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினார். வழியில் சிறுமி Keisha, 26 வயது ஆண் ஒருவரைச் சந்தித்திருக்கிறார். அவரோ அச்சிறுமியின் சொந்த வீட்டில் சேர்ப்பதாக ஆசைகாட்டியதோடு அதற்குப் பணம் தேவை என்று சொல்லி, இறுதியில் Keishaவை கட்டாயமாகப் பாலியல் வணிகத்தில் சேர்த்துவிட்டிருக்கிறார்.

இப்படி பல Keishaக்களின் வாழ்வு பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் பட்ட கடனை அடைப்பதற்காக, தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் செங்கற்சூளையில் கொத்தடிமையாக வேலை செய்கிறார் இந்தியப் பெண் Balbinerkaur. உலக தொழில் நிறுவனத்தின் கணிப்புப்படி, ஏறக்குறைய 84 இலட்சம் சிறார் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர். வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் உரிமை மீறல்களால் இச்சிறார், பாலியல் தொழிலுக்கும், பாலியல் இன்பம் சார்ந்த வேறு நடவடிக்கைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். கட்டாயமாகப் பிச்சை எடுக்க வைத்தல், திருடச் செய்தல், போதைப்பொருள்களை விற்கச் செய்தல் போன்ற சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளைச் செய்யவும் சிறார் மிரட்டி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தொழிற்சாலைகள், பண்ணைகள், செங்கல்சூளைகள், கனிமச் சுரங்கங்கள், உணவு விடுதிகள், மதுபானக் கடைகள், சுற்றுலாத் தலங்கள் எனப் பல இடங்களில் இவர்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அதோடு, ஆயுதம் ஏந்தி சண்டை இடம்பெறும் இடங்களிலும் சிறார் விட்டுவைக்கப்படுவதில்லை. இன்று உலகில் சண்டை இடம்பெறும் முப்பதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய மூன்று இலட்சம் சிறார் படைவீரர்கள் உள்ளனர், இவர்களில் சிறுமிகள், அரசுப் படைகளுக்கும் புரட்சிப் படைகளுக்கும் மனைவிகளாக இருக்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று ஐ.நா. வெளியிட்ட புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இன்று உலகில் 20 கோடிக்கு மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் உள்ளனர் என, உலக தொழில் நிறுவனம் கூறியுள்ளது. இச்சிறார், அடிமைத்தொழில் செய்யும் சிறாரிலிருந்து வேறுபட்டவர்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அன்பர்களே, இன்றும் உலகெங்கும் மக்கள் பல்வேறு வழிகளில் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுவது, சகோதரத்துவம் என்ற அடிப்படைக் கூறைக் கொல்வதாக இருக்கின்றது. இந்நிலை அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றது. ஒவ்வொரு மனிதரும், தங்களோடு வாழும் ஒவ்வோர் ஆணையும் பெண்ணையும் அவர்களது மாண்போடு சகோதர சகோதரியாக நோக்காதவரை உலகில் அமைதி என்பது கானல் நீராகவே இருக்கும். இந்நிலையில் அமைதியை எட்டுவது என்பது எட்டாக்கனியே.

எனவே, 2015ம் ஆண்டு சனவரி முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் 48வது உலக கத்தோலிக்க அமைதி தினத் தலைப்பாக, “இனி யாரும் அடிமை இல்லை, நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்” என்ற தலைப்பை நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளதை நாம் சிந்திப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். இந்தத் தலைப்பை கடந்த வியாழனன்று வெளியிட்ட திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையும், இன்றைய நவீன அடிமைத்தனம், சமூகக் கொள்ளை நோயாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிறுவனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கூலித்தொழிலாளி கார்த்திக் கடந்த வாரத்தில் எதிர்கொண்ட ஒரு கொடுமை இதற்கு ஒரு சான்று. கடந்த திங்களன்று, தன் வீட்டின்முன் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்ததற்காக அந்த இளைஞரின் கை வெட்டப்பட்டது. இவர் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அன்பு நேயர்களே, நம்மில் சகோதரத்துவப் பண்பை வளர்த்துக்கொள்வோம். பிறரையும் அவ்வாறு வாழ்வதற்குத் தூண்டுவோம். கடந்த வாரத்தில் ஆரணியில் கல்லூரிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பி.காம். முதலாமாண்டு மாணவியை ஒரு கும்பல் கத்தியைக் காட்டி காரில் கடத்திச் சென்றுள்ளது. அங்கு நின்ற மற்றவர்களையும் மிரட்டியுள்ளது. ஆனால் அதைப் பார்த்த இரு இளைஞர்கள் சக்கர வாகனத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அந்தக் கும்பலைப் பிடித்துள்ளனர். இந்த இளைஞர்களின் சகோதரத்துவத்தைப் பாராட்டுவோம்.

“நேசமுள்ள மனிதர்கள் வாழுமிடத்தில், தண்ணீர் கூட இனிப்பாயிருக்கும்” என்று ஒரு பொன்மொழி உள்ளது. உங்களுடைய வாழ்க்கை வசதிகள், புகழ் மாலைகள், பதவிகள் என அனைத்தையும் பயன்படுத்தி வாழ்க்கைக் கடலைக் கோடிக்கணக்கானோர் கடக்க ஒரு பாலம் கட்டுங்கள், அதன் வழியே எல்லா நன்மைகளும் ஒன்று சேர உதவுங்கள் என்றுரைத்த சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை வாழ்வாக்குவோம். சகோதரத்துவப் பண்பில் வளர்வோம். “இனி யாரும் ஒருவருக்கொருவர் அடிமை இல்லை, நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்”என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கனவை நம் வாழ்வில் நனவாக்குவோம். அப்போது நம் உள்ளத்திலும் இல்லத்திலும் நாட்டிலும் அமைதி நிலவும்.
வட இந்தியாவைச் சேர்ந்த டேம்மிட்சல் என்பவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது ஒரு மலைப்பாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டு உடனே அந்தப் பாம்பை தன்வீட்டிற்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளித்து அதன் உயிரைக் காத்து தன்னுடனே வளர்த்து வந்தார். ஓரிரு மாதங்களில் பாம்பும் அவரும் ஒருதாய் பிள்ளை போல பழக ஆரம்பித்துவிட்டனர். இப்படியே வருடங்கள் உருண்டோடின. திடீரென்று ஒருநாள் அவரை மரணம் ஆட்கொண்டது. அவரது உறவினர்கள் அவருக்கு சடங்குகைள முடித்து உடலை மயானத்திற்கு எடுக்க முற்படும்போது அந்தப் பாம்பு அவரின் உடலை சுற்றிகொண்டு விடவில்லை. உறவினர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த பாம்பு அவர் உடலை விடவில்லை. பிறகு வேறு வழி இல்லாமல் அந்த பாம்பையும் அவரின் உடலோடு சேர்த்து கட்டி மயானத்தில் புதைத்துவிட்டனர். ஐந்தறிவு ஜீவனுக்கு இருந்த பாசம், அன்பு நம்மிலும் இருக்கட்டும்.







All the contents on this site are copyrighted ©.