2014-08-25 16:12:00

திருத்தந்தை: திருஅவை தொடர்ந்து கட்டப்பட, வாழும் கற்களாகிய நாம் தேவை


ஆக.25,2014. தன் மீது சீடர்கள் கொண்டிருந்த அன்பு மற்றும் நம்பிக்கையில் உருவான உறவில், அதாவது விசுவாசத்தில் தன் திருஅவையைக் கட்டியெழுப்ப விரும்பிய இயேசு, பேதுரு எனும் பாறையின் மீது அதனைக் கட்டினார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையில் விளக்கமளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நீங்கள், நான் யாரென்று சொல்கிறீர்கள்?' என்று இயேசு தன் சீடர்களிடம் கேட்டபோது பேதுருவின் பதிலால் கவரப்பட்டு அவருக்கு பாறை என்ற பெயரை வழங்கினார், என்றார்.
இன்றும் நாம் நமக்குள் கேட்கவேண்டியக் கேள்வியை இந்த நற்செய்தி வாசகம் நமக்கு நினைவூட்டி நிற்கின்றது, ஏனெனில், நம்முடைய விசுவாசம் எத்தகையது என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பேதுரு எனும் பாறையின்மீது திருஅவைக் கட்டப்பட்டபோதிலும், இன்றும் தன் திருஅவையைத் தொடர்ந்து கட்டியெழுப்ப இயேசுவுக்கு நம் நேர்மையான விசுவாசம் தேவைப்படுகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான விசுவாசம் இருக்கும் ஒவ்வொருவரையும் வாழும் கற்களாக கண்டுகொள்கிறார் இயேசு எனவும் உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.