2014-08-25 16:13:51

குஜராத் பள்ளிகளில் பகைமையும் வன்முறையும் போதிக்கப்படுகிறது, இயேசுசபையினர் புகார்


ஆக.25,2014. குஜராத் பள்ளிகளில் தீவிரவாதத்தையும் இந்து தேச உணர்வுகளையும் அம்மாநில அரசு போதித்துவருவதாக அங்கு பணியாற்றும் இயேசு சபை அருள்தந்தையர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அரசின் இச்செயல்பாடுகள் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்ட, அம்மாநிலத்தின் ஆஹமதாபாத்திலுள்ள, மனித உரிமைகள்,நீதி மற்றும் அமைதி மையத்தின் தலைவர் அருள்பணி செத்ரிக் பிரகாஷ் அவர்கள், தனித்துவம், இனவாதம், பாகுபாட்டு நிலைகள் போன்ற கொள்கைகளை உள்ளடக்கிய 9 பாடநூல்களை 42,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது என்றும், இது, பகைமையையும் வன்முறையையும் ஆதரிக்கும் குழுவின் செயலாக உள்ளது எனவும் கூறினார்.
இந்து மதத்தையும் இந்து கலாச்சாரத்தையும் காக்கவேண்டும் என விரும்பும் குழுக்கள், அதனை அரசுக் கல்வி அமைப்புமுறை மூலம் நிறைவேற்றத் துணிவதாகவும் குற்றஞ்சாட்டினார் அருள்பணி பிரகாஷ்.
தவறானக் கொள்கைகளையும் மூடநம்பிக்கைகளையும் கற்பிக்கும் இந்தப் பாடப் புத்தகங்கள், இந்தியக் கலாச்சாரத்தைக் கெடுக்க வந்த மொழி, ஆங்கிலம் எனவும், கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த மதங்கள் எனவும் கூறுவதாக தெரிவித்தார் அருட்பணி பிரகாஷ்.
சரியான கருத்துக்களைப் பெறுவதற்கான சிறார்களின் உரிமைகள் மதிக்கப்படவும், இப்பாடப் புத்தகங்கள் திரும்பப் பெறப்படவும் நல்மனம் கொண்ட அனைவரும் முன்வந்து போராடவேண்டும் எனவும் அருள்பணி பிரகாஷ் அழைப்புவிடுத்தார்.

ஆதாரம் : FIDES








All the contents on this site are copyrighted ©.