2014-08-25 15:46:46

ஐரோப்பாவில் முதல் இலவசப் பள்ளிகளை ஆரம்பித்தவர் (St Joseph Calasanz)


இஸ்பெயின் நாட்டவரான அருள்பணியாளர் ஜோசப் கலாசான்ஸ், 1592ம் ஆண்டில், தனது 35வது வயதில் உரோமைக்குச் சென்றார். அங்கு தனது குருத்துவப் பணியை மேலும் திறம்படச் செய்யலாம் என நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு வேறுவிதமான பிறரன்புப் பணிகள் அங்கு காத்திருந்தன. உரோமையில் பெற்றோரை இழந்த, கைவிடப்பட்ட பல வீடற்ற சிறாரைக் கண்டார். உடனே இவர் கிறிஸ்தவக் கோட்பாட்டுத் தோழர்களோடு சேர்ந்து தெருக்களிலிருந்து சிறார்களை அழைத்து வந்து அவர்களைப் பள்ளிக்கு அனுப்பினார். அச்சமயத்தில் ஆசிரியர்கள் மிகக் குறைவாகவே ஊதியம் பெற்றதால், இந்தத் தெருச்சிறார், அவர்கள் பணிக்கு கூடுதல் சுமை என்று கருதி இச்சிறாரை அவர்கள் ஏற்க மறுத்தனர். அடுத்து என்ன செய்வதென்று சிந்தித்தபோது, அருள்பணியாளர் Anthony Brendani, தனது பங்கு ஆலயத் திருப்பூட்டறையில் இரண்டு அறைகளையும், கல்விக்குத் தேவையான பிற பொருள்களையும் இலவசமாகக் கொடுத்தார். மேலும் இரு அருள்பணியாளர்கள் இதற்கு உதவிக்கரம் நீட்டவே அருள்பணியாளர் கலாசான்ஸ், 1597ம் ஆண்டு நவம்பரில் ஐரோப்பாவில் முதல் இலவசப் பள்ளியைத் தொடங்கினார். இதற்கு அப்போதைய திருத்தந்தை 8ம் கிளமென்ட் நிதியுதவி அளித்து ஆதரவு வழங்கினார். இவ்வாறு அருள்பணியாளர் ஜோசப் கலாசான்ஸ் ஐரோப்பா எங்கும் பல “கிறிஸ்தவப் பள்ளிகளை”த் தொடங்கினார். ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாக கல்வி வழங்குவதே இவரின் முக்கிய நோக்கமாக இருந்தது. கத்தோலிக்கக் கல்வியை ஊக்குவிப்பதற்கென ஒரு சபையையும் இவர் நிறுவினார். அச்சபையினர் Piarists(Order of Poor Clerics Regular of the Mother of God of the Pious Schools) என அழைக்கப்படுகின்றனர். இவரின் இப்பணியைப் பாராட்டி, "உலகில் அனைத்துக் கிறிஸ்தவப் பள்ளிகளின் உலகளாவிய பாதுகாவலர்" என 1948ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் அறிவித்தார். அதோடு அனைத்துச் சிறாரும் கற்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர் எனவும் திருத்தந்தை அறிவித்தார். 1767ம் ஆண்டில் புனிதராக அறிவிக்கப்பட்ட அருள்பணியாளர் ஜோசப் கலாசான்ஸ் தனது 90வது வயதில், 1648ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி இறைபதம் அடைந்தார்.
1598ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று உரோமையில், டைபர் நதியில் வெள்ளம் ஏறக்குறைய இருபது மீட்டர் உயரத்துக்கு வர, நதிக்கரையில் வாழ்ந்த நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் வீடிழந்து உணவில்லாமல் கஷ்டப்பட்டனர். அருள்பணியாளர் கலாசான்ஸ் உடனடியாக நிவாரணப் பணியில் இறங்கினார். நகரையும் சுத்தம் செய்தார்.
1556ம் ஆண்டு ஸ்பெயினில் கலாசான்ஸ் அரண்மனையில் பிறந்த ஜோசப் கலாசான்ஸ்டுடன் பிறந்தவர்கள் 8 பேர். குடும்பத்தில் கடைக்குட்டியான இவர் கல்வியறிவில் சிறந்து விளங்கினார். சட்டத்திலும் இறையியலிலும் முனைவர் பட்டம் பெற்றார். இளவயதில் தாயையும் சகோதரரையும் இழந்ததால் இவரது தந்தை இவருக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது இறைவனின் திட்டம் வேறுவிதமாக இருந்தது. 1582ம் ஆண்டில் தனது 25வது வயதில் இவர் கொடிய நோயால் தாக்கப்பட்டார். மரணத்தின் வாயில்வரை சென்று திரும்பிய ஜோசப் கலாசான்ஸ், தனிமையான நேரங்களில் இறைவனின் அழைப்பை உணர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டில் அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.