2014-08-25 16:12:42

அயர்லாந்தின் முன்னாள் பிரதமர் ரெய்னால்ட்ஸ் மரணத்தையொட்டி, திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கல் தந்தி


ஆக.25,2014. அயர்லாந்தில் ஒப்புரவையும், அமைதியையும் உருவாக்க ஒரு சக்திவாய்ந்த கருவியாக ஆல்பர்ட் ரெய்னால்ட்ஸ் அவர்கள் விளங்கினார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 21, கடந்த வியாழனன்று அயர்லாந்தின் முன்னாள் பிரதமர் ரெய்னால்ட்ஸ் அவர்கள், தன் 81வது வயதில் மரணமடைந்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் பெயரால், இவ்விரங்கல் தந்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், டப்ளின் பேராயர், Diarmuid Martin அவர்களுக்கு அனுப்பிவைத்தார்.
ஆகஸ்ட் 25, இத்திங்களன்று டப்ளினில் உள்ள திரு இருதயப் பேராலயத்தில் நடைபெற்ற இறுதி அடக்கச் சடங்கில், பேராயர் மார்டின் அவர்கள், திருத்தந்தையின் இரங்கல் செய்தியை வாசித்தார்.
1992ம் ஆண்டு முதல், 1994ம் ஆண்டு முடிய அயர்லாந்தின் பிரதமராகப் பணியாற்றிய ஆல்பர்ட் ரெய்னால்ட்ஸ் அவர்கள், IRA எனப்படும் அயர்லாந்து போராளிகள் குழு, தன் சண்டைகளை நிறுத்த, 1994ம் ஆண்டு எடுத்த முடிவுக்கு, முக்கியமான காரணமாக இருந்தார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.