2014-08-23 15:29:42

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களின் வாழ்வு, தாராளப் பிறரன்புச் செயல்களால் நிரம்பியுள்ளது


ஆக.23,2014. “கொடுப்பது எப்படி என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கின்றனர், அவர்களின் வாழ்வு, அடுத்தவருக்குத் தாராளமாகச் செய்வதால் நிரம்பியுள்ளது, இது பல நேரங்களில் மறைவாக உள்ளது” என்று, தனது டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்தாலியின் 35வது ரிமினிக் கூட்டத்துக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் ஒதுக்குப்புறங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவிப்பதற்கு அஞ்சத் தேவையில்லை, ஏனெனில் அவர்கள் வாழ்வில் இயேசு மையமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
ரிமினியில் நடக்கும் மக்கள் மத்தியில் நட்புக்கான 35வது கூட்டத்துக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் இச்செய்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
உலகின் ஒதுக்குப்புறங்களுக்குச் செல்லுங்கள் என்ற, இக்கூட்டத்தின் மையப்பொருளை வைத்து அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியில், புவியியல் அளவுப்படி மட்டுமல்லாமல், மக்கள் வாழுகின்ற ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவிப்பதற்குத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வுப் பொருள்கள் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டநிலை, தனிமனிதக் கோட்பாட்டால் தனிமையை உணரும் நிலை போன்றவற்றுக்கு மத்தியில் இறைவனுக்கான தாகம் இருப்பதையும் இன்றைய சமுதாயத்தில் காண முடிகின்றது, இச்சூழலில் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாச வாழ்வால் சான்று பகருமாறும் அச்செய்தி கேட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.