2014-08-22 15:28:45

பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி அவர்களின் பெற்றோருடன் தொலைபேசியில் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்


ஆக.22,2014. இவ்வாரத்தில் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி அவர்களின் பெற்றோரைத் தொலைபேசியில் அழைத்து தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 19, இச்செவ்வாயன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தலைவெட்டப்பட்டு இறந்த பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி அவர்களின் பெற்றோர் John, Diane Foley ஆகிய இருவரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசினார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் தெரிவித்தார்.
கத்தோலிக்கரான, அமெரிக்க, 'பிரிலான்ஸ்' பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி அவர்கள், கடந்த 2012ம் ஆண்டு நவம்பரில், சிரியாவுக்கு செய்தி சேகரிக்கச் சென்றபோது அவரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது செய்தனர்.
இவரது உயிருக்கு ஈடாக, 13 கோடியே 20 இலட்சம் டாலரை($132m) பிணையல்தொகையாக இவரது குடும்பத்தினரிடம் இந்தத் தீவிரவாதிகள் கேட்டதாக செய்திகள் கூறுகின்றன.
பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி அவர்கள், 2011ம் ஆண்டில் லிபியாவில் கைது செய்யப்பட்டிருந்தபோது எவ்வாறு செபமாலை செபித்தார் என்பதை அவரே எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.