2014-08-22 15:29:08

கேரளாவில் மதுபானம் முழுமையாகத் தடைசெய்யப்படுவதற்கு கர்தினால் ஆதரவு


ஆக.22,2014. தென்னிந்திய மாநிலமான கேரளாவில் இன்னும் பத்து ஆண்டுகளில் மதுபானத்தை முற்றிலுமாகத் தடைசெய்வதற்குத் திட்டமிட்டுள்ள கேரள அரசின் தீர்மானத்தை வரவேற்றுள்ளது தலத்திருஅவை.
கேரளாவில் மதுபானக் கடைகளுக்கான அனுமதிகள் முற்றிலும் இரத்து செய்யப்பட வேண்டும் என அம்மாநிலத்தின் கிறிஸ்தவத் தலைவர்கள் தொடர்ந்து போராடி வரும்வேளை, அரசின் இவ்வறிவிப்பை வரவேற்றுள்ளார் சீரோ மலபார் வழிபாட்டுமுறைத் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஆலெஞ்சேரி.
கேரளாவில் ஆட்சிசெய்யும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இவ்வியாழனன்று நடத்திய இரண்டு மணிநேரக் கூட்டத்துக்குப் பின்னர் ஒரே மனதாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஞாயிறு தினத்தை மதுபானம் விற்பனையற்ற நாளாக அறிவிக்கவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூடப்பட்டுள்ள 418 மதுபானக் கடைகளுக்கு அனுமதி உரிமை வழங்கப்பட மாட்டாது எனவும், மீதமிருக்கும் 312 மதுபானக் கடைகளுக்கும் உரிமை முற்றிலுமாக இரத்து செய்யப்படும் எனவும், ஒவ்வோர் ஆண்டும் அம்மாநிலத்திலுள்ள மதுபானக் கடைகளில் பத்தில் ஒன்று மூடப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
2015ம் ஆண்டிலிருந்து ஆடம்பர தங்கும் விடுதிகளுக்கு மட்டுமே மதுபான அனுமதி உரிமை வழங்கப்படும் என்று மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
இந்தியாவில் கேரளா தான் மதுஅருந்துதலில் உச்சத்தில் உள்ள மாநிலமாக கருதப்படுகின்றது. ஆண்டுக்கு நபர் ஒருவரின் சராசரி மது அருந்தும் அளவு 8 லிட்டருக்கும் அதிகம் எனச் சொல்லப்படுகின்றது.
கேரளாவில் மதுக்கடைகளால் அரசுக்கு ஆண்டுக்கு எட்டாயிரம் கோடி ரூபாய் கிடைக்கின்றது என ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : Times of India







All the contents on this site are copyrighted ©.