2014-08-22 15:29:17

காசாவில் நீதிக்கும் அனைத்துலக அமைதிக்கும் முதுபெரும் தந்தை Twal அழைப்பு


ஆக.22,2014. பாலஸ்தீனாவின் காசாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இஸ்லாமிய அமைப்புக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டை, அழிவையும் மரணங்களையும் ஏற்படுத்தி வரும்வேளை, எகிப்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது குறித்து கவலை தெரிவித்துள்ளார் எருசலேம் முதுபெரும் தந்தை Fouad Twal.
புனிதபூமியின் நிலைமை குறித்து வத்திக்கான் வானொலிக்கு இவ்வெள்ளியன்று பேட்டியளித்த எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Twal அவர்கள், எல்லாருக்கும் சாதகமான ஓர் இறுதித் தீர்வை எட்டுவதில் அரசியல் முறைப்படி நன்மனம் இல்லாததால், இத்தகைய பேச்சுவார்த்தைகள் மீது எப்பொழுதும் ஒருவித அச்சம் இருந்துகொண்டே இருக்கின்றது என்று தெரிவித்தார்.
வன்முறைக்கு இட்டுச்செல்லும் நிலைமைகள் மாறாமல் இருக்கும்போது பேச்சுவார்த்தைகள் எதற்கு என்ற கேள்வியை எழுப்பிய முதுபெரும் தந்தை Twal அவர்கள், புதிய கலாச்சாரம், புதிய மனநிலை, காசாவைச் சுற்றியுள்ள சுவரை உடைக்கும் அனைத்துலக அமைதிப்படை, சாதாரண வாழ்வு போன்றவை அவசியம் எனவும் கூறியுள்ளார்.
காசாவில் சாதாரண வாழ்வு இருந்தால், காசாவிலிருந்து வெளியே செல்வதற்கும் உள்ளே வருவதற்கும் சாலை வசதிகள் இருந்தால், பயணம் செய்வதற்கு விமான நிலையம் இருந்தால், இஸ்ரேல், எகிப்து, ஜோர்டன் ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்கு வசதிகள் இருந்தால், மக்கள் வாழவும், படிக்கவும், மருத்துவமனைகளுக்குச் செல்லவும், தொழில் செய்யவும் முடியும் எனத் தெரிவித்தார் முதுபெரும் தந்தை Twal.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.